ஆல் பாஸ்.. ஒரு ஃபீல் குட் மூவி.. பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி, சசிக்குமார்

Su.tha Arivalagan
Dec 01, 2025,01:20 PM IST

சென்னை: வியாபாரத்தை மட்டுமே, மனதில் கொள்ளாமல் நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் படங்கள் வரிசையில் ஆல் பாஸ் படமும் சேரும் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் விஜய் சேதுபதி, சசிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.


தமிழ் சினிமாவில் சமீப காலமாக நல்ல கதைகளுடன் கூடிய படங்கள் அதிகமாகவே வெளியாகி வருகின்றன. பார்க்கிங், டூரிஸ்ட் பேமிலி, மகாராஜா உள்ளிட்ட சில படங்களை உதாரணமாக காட்டலாம். இவை நல்ல கதையுடன் மட்டுமல்லாமல் வசூலிலும் கூட அசத்தின. இந்த வரிசையில் இப்போது ஆல் பாஸ் என்ற படம் வெளியாகவுள்ளது.


ஒன்ஸ் ஸ்டெப் என்டர் டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா தயாரித்துள்ள படம்தான் ஆல் பாஸ். இப்படத்தில் துஷ்யந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். முக்கியப் பாத்திரத்தில் பசங்க படத்தின் தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ், செந்தில்குமாரி, இயக்குனர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.




அட்டகாசமான பேமிலி சென்டிமென்ட் கதையாம் இது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன். 


இப்படம் வட சென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பற்றி பேசும் படமாக அமைக்கப்பட்டுள்ளது. வட சென்னை என்றாலே என்ற வழக்கமான திரை முத்திரையை உடைக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்று  சொல்கிறார்கள். அதுவே முதலில் மகிழ்ச்சியைத் தருகிறது.  இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


இந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தங்களது எக்ஸ் தளத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் மற்றும் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளனர். இது இப்போது வரவேற்பைப் பெற்று வருகிறது.


(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)