போர்க்கொடி உயர்த்தும் கூட்டணி கட்சிகள்.. பொறுமை காக்கும் திமுக.. காத்திருக்கும் அதிமுக!

Su.tha Arivalagan
Sep 25, 2025,05:00 PM IST

சென்னை : கடந்த வாரம் வரை அதிமுக கூட்டணியில் தான் நொடிக்கு நொடி மாற்றம், கலகக் குரல்கள் என எழுந்ததால் தமிழக அரசியல் களமே பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. 


அதிமுக- பாஜக கூட்டணி கூடுதல் பலமாக, தேர்தல் பிரச்சார வேலைகளை மும்முரமாக கவனிக்க துவக்கி விட்டார்கள். மாறாக இதுவரை அமைதியாக இருந்த திமுக கூட்டணியில் பல விதங்களில் இருந்தும் சிக்கல்கள், நெருக்கடிகள் எழுந்துள்ளது.


நெருக்கடி தரும் காங்கிரஸ் : 




திமுக கூட்டணியில் மிக முக்கியமான கட்சியாக இருக்கும் காங்கிரஸ், தங்களுக்கு இந்த முறை அதிகமான இடங்களை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி கேட்டும் இடங்களை திமுக தலைமை தர மறுத்தால் கூட்டணியில் இருந்து விலகி, தவெக உடன் கைகோர்க்கவும் பிளான் பி ஒன்றை தயாரித்து வைத்துள்ளதாம் காங்கிரஸ். 


காங்கிரசே திமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டால் விசிக, மதிமுக போன்ற கட்சிகளை கேட்கவே வேண்டாம். தானாக விலக தயாராகி விடுவார்கள். ஒருவேளை கூட்டணியை காப்பாற்ற காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை தருவதற்கு திமுக தலைமை முன் வந்தால், மற்ற கட்சிகளும் அதே போன்ற கோரிக்கையை முன் வைக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தாலும் அது திமுக கூட்டணிக்கு தான் சிக்கலை ஏற்படுத்தும்.


திமுக.,விற்கு வந்த தலைவலி : 


தொகுதி பங்கீட்டில் தான் இந்த நிலை என்றால், திமுக கூட்டணியில் மற்றொரு பிரச்சனையும் உருவாகி உள்ளது. தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவுகளை தேர்தல் கமிஷன் ரத்து செய்து சமீபத்தில் உத்தரவிட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் கொங்கு முன்னேற்றம் கழகம் உள்ளிட்ட சில சிறிய கட்சிகள் கடந்த சில தேர்தல்களாகவே தங்கள் கட்சியின் சின்னத்தில் போட்டியிடாமல், திமுக.,வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுட்டு வந்தன. இதனால் அந்த கட்சிகளை பதிவுகள் ரத்தாகி உள்ளது. 


அதனால் இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் அந்த கட்சிகள் உள்ளன. அப்படி போட்டியிட்டால், உதயசூரியன் இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் களம் காணும் தொகுதிகளில் அதிமுக.,வின் வெற்றி எளிதாகி விடும்.


என்ன செய்ய போகிறது திமுக?




திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, தவெக உடன் சென்றால் அதிமுக.,வின் வெற்றி எளிதாகி விடும் என்பதுடன், திமுகவின் வெற்றி பெரும் கேள்விக்குறியாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் காங்கிரசை சமாதானப்படுத்தி, ஓரளவிற்கு கனிசமான தொகுதிகளை தருவது சிறப்பானதாக இருக்கும். 


மற்ற கட்சிகளுக்கு எம்.பி., பதவி கொடுப்பதாகவோ அல்லது அமைச்சரவையில் இடம் தருவதாகவோ டீல் பேசி அவர்களை கூட்டணியிலேயே இருக்க வைக்கலாம். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்களை வேட்பாளர்களாக போட்டியிட வைக்கலாம்.


திமுகவுக்குள் இப்படி நடந்து வரும் பூசல்களை அதிமுக வேடிக்கை பார்த்து வருகிறது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதில் ஸ்கோர் செய்ய அதிமுக முயலும் என்பதால் அதுகுறித்தக் கவலையும் திமுகவிடம் உள்ளது. ஆனால் எப்படி குழப்பம் ஏற்பட்டாலும் கூட கடைசியில் கூட்டணியை பத்திரமாக பாதுகாத்து தேர்தலை சந்திக்கும் அனுபவம் திமுகவிடம் நிறையவே உள்ளதால் திமுகவினர் நிதானமாகவே உள்ளனர்.