ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !
Jul 15, 2026,06:40 PM IST
- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
ஆகச்சிறந்ததொரு
அர்ப்பணிப்பாய்
நல் குணமாய்
கர்மவீரராய்
வாழ்ந்த நாட்களது
நாட்டின் பொற்காலமது
ஏடெடுத்து
படிச்சதில்ல
எழுத்தெல்லாம்
உன்னுருவம்
ஏடெல்லாம்
உன் புகழே
மதி சிறக்க
ஊரெங்கும்
பாடசாலை
அமைத்தாய்
ஏழ்மை
நிறைந்த மக்களின் வறுமையுணர்ந்து
கல்வியோடு
மதியஉணவும்
தாயன்போடு தந்தாய்
பொருளாதார
நிலையுயர்த்த
தொழிற்சாலை
அமைத்தாய்
மக்களோடு
மக்களாக
வாழந்திட விரும்பியே
எளிமை வாழ்வு தனை
நீ ஏற்றாய்
கனிவான உன் பேச்சிலும் செயலிலும்
மக்கள் உள்ளங்களில்
நீக்கமற
நிறைந்திட்டாய்
அரசியலில் முளைத்திட்ட வல்லூறுகளைக்கண்டு
மனது தளராது நடைபோட்டாய்
பிறந்தபோது என்ன கொண்டு வந்தோம்
போகும் போது என்ன கொண்டு போக
போகின்றோம் என்பதை
நன்கு உணர்ந்தவர்
மீளாத்துயில்
கொண்ட போது
சட்டையில் இருந்த
சில ரூபாய் நோட்டுக்களே
நீ சேர்த்திருந்த
பெரும் சொத்து
தன் வாழ்நாள் முழுவதையும் தனக்காக வாழாமல் மக்களுக்காகவே
வாழ்ந்தவர்.
தமிழகத்தின் தலைமகனாய்
ஏழைபங்காளனாய்
தாங்கள் வாழ்ந்த
அந்த நாட்கள் இம்மண்ணின் பொற்காலங்கள்