ஒரு நதியின் பயணம்

Su.tha Arivalagan
Jul 11, 2026,11:46 AM IST

- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்


ஆகாசம்

கொள்ளாமல்

நீர்விழ்ச்சியாய்

விழுந்தாலும் 

நதியாய்

என் பயணம் 

தொடர்ந்தாச்சு

துள்ளியோடும்

புள்ளிமானாய்

என் பயணமாச்சு

மனம் கொள்ளா

மகிழ்வாச்சு




சென்ற 

இடமெல்லாம் 

சிறப்பாச்சு 

என் பாதம் பட்ட

இடமெல்லாம் 

தங்கமாச்சு

நெற்பயிரும்

முத்தாச்சு 

முப்போகம்

வரவாச்சு

மக்கள் வாழ்வும்

செழிப்பாச்சு

மனசெல்லாம் 

நெறஞ்சாச்சு


நதியாய்

வனம் நோக்கி

என் பயணம்

தொடர்ந்தாச்சு...

பூத்துக் குலுங்கும் 

மரங்களுக்கு 

வசந்தமும்

வந்தாச்சு...

வண்ண வண்ண

மலர்கள் பூத்து

குலுங்கத் 

துவங்கியாச்சு...

நறுமனம்

வனமெங்கும்

பரவியாச்சு...

காதல் கிளிகள்

தங்கள் அன்பைப்

பரிமாறத்

தொடங்கிருச்சு...

கண்கொள்ளாக்

காட்சியைக் கண்டு

மானும் மயங்கி

நின்னுருச்சு...

எனக்கான

வரவேற்பும்

கிடைச்சாச்சு...

வாண்டு பசங்க

குட்டிக்கரணம்

அடிச்சாச்சு...

யானைக் குட்டிகள்

என்னோடு

கும்மாளம் போட்டாச்சு...

மங்கையர் யாவரும்

மஞ்சள் பூசி

குளிச்சாச்சு...

தாகம் தணிக்க 

மண்பானையில்

மொண்டாச்சு...

தூய்மையான

நதியாய்

என் பெருமை

பெருசாச்சு


நதியாக

என் பயணம்

நகருக்குள்

திரும்பியாச்சு...

ஓட்டத்தில்

ஒருவித 

தயக்கம்

உண்டாச்சு...

மேலே

செல்லச் செல்ல

மூச்சுத் திணறலாச்சு...

என் பாய்ச்சல்

தடையாச்சு...

நெகிழிப் பைகள்

எனைச் சுற்றிச்

சூழ்ந்தாச்சு...

மூச்சுத் திணறல்

பெருசாச்சு...

வெகு நேரம் போராடி

நெகிழிகளை

விலக்கியாச்சு...

தடைப்பட்ட 

என் பயணம்

தொடர்ந்தாச்சு...

ஏதோ 

இனம் புரியாத

நடுக்கமாச்சு...

ஆம் என்னோடு

வண்ண வண்ண 

நீர்கள் கலந்தாச்சு...

நீரல்ல அது

தொழிற்சாலை

கழிவாச்சு...

என் தூய்மை

பறிபோச்சு...

நதி முழுவதும்

மாசாச்சு...

அணு அணுவாய்

நான் ரசித்த

அனைத்தும்

எனைவிட்டு

வெகுதூரம்

போயாச்சு...

என் வாழ்வு 

முடிய காரணம் 

யாராச்சு...

இத்தோடு

என் பயணம்

முடிஞ்சாச்சு.