மோடி பொங்கல் விழா: திருச்சியில் அமித்ஷா கொண்டாட்டம்
திருச்சி: திருச்சியில் பாஜக சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தார். நேற்று, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.
அதன்பின்னர், இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து, திருச்சி மன்னார்புரத்தில் நடைபெறும் மோடி பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நம்ம ஊரு மோடி பொங்கல் என்ற பெயரில் மிக பிரம்மாண்ட அளவில் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பொங்கல் விழாவில் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். 1008 பொங்கல் பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ்கோயல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.