அம்மா... வென்றார்!
- முனைவர் தி. தங்கலட்சுமி
மிகப்பெரிய மருத்துவமனையின் ஐசியூ பிரிவின் வாசலில் காத்திருப்போர் பகுதியில் மனம் நிறைய பிரார்த்தனையோடும் வேண்டுதல்களோடும் ஒரு நடுவயது கடந்த தாயார்.
பரபரப்பாக உள்ளேயும் வெளியேயும் விரைந்து போவதும் வருவதுமான செவிலியரின் செயல்பாடும் மருத்துவர் குழுவின் கலந்தாலோசனைகளும் நள்ளிரவிலும் தொடர்ந்தன.
விலை மற்றும் வீரியம் உயர்ந்த மருந்துகளின் பெயர்கள் அடங்கிய மருந்துச்சீட்டோடு வயதான அப்பா, மருத்துவ வளாக மருந்தகத்தை நோக்கி விரைந்தார்.
மருந்துகளோடு வந்த அப்பாவிடம், மருத்துவர், “கிருமித் தொற்று மூளை வரை பரவிவிட்டது. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். பிழைப்பதற்கு ஒரு சதவீத வாய்ப்பே இருக்கிறது. உறவுகளுக்குச் சொல்வதென்றால் சொல்லிவிடுங்கள்” எனக் கூறிய கையோடு, புதிய வேகம் நிறைந்த மருந்துகளைக் கையாள ஐசியூ வினுள் விரைந்துவிட்டார்.
பேரிடியான தகவலோடு வருத்தம் தோய்ந்த முகத்துடன் காத்திருக்கும் தன் மனைவியிடம் வந்து, மருத்துவர் சொன்ன அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்தார் அப்பா.
உள் உடைந்த அம்மா வெளியில், ‘உயிரோட பிள்ளை பிழைச்சு எழுந்தா, ஊருக்கு அழைச்சுப் போவோம். இல்லாதுபோனா, என் பிள்ளைய இங்கேயே அறுத்து ஆராய்ச்சி செய்ய வைத்துக் கொள்ளச் சொல்லி எழுதிக் கொடுத்துடுவோம்’ என்றாள்.
தன் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்த எம தர்மராஜன், அம்மாவின் தியாக வைராக்கிய வார்த்தைகளால் தாக்குண்டு, தன் 99% வாய்ப்பைக் கைநழுவவிட்டுத் தோற்றுப்போனான்.
(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).