அம்மாவின் கோல நோட்டு (சிறுகதை)

Su.tha Arivalagan
Feb 16, 2026,01:36 PM IST

- ஷீலா ராஜன்


தனது வீட்டு வாசலை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார் மாலா. எனக்கு இப்போ போய் உடம்பு சரியில்லாம ஆச்சு இன்று மிகவும் வருத்தப்பட்டு கொண்டு இருந்தார். இப்போ என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் மாலா. 


சிறிது நேரம் கழித்து.. கமலா, கமலா எனக்கு எனக்கு ஒரு  உதவி செய்றியா ?? என  கொஞ்சம் தயங்கி தயங்கி கேட்ட அம்மாவை நெருங்கி வந்தாள் கமலா.


என்னம்மா பண்ணனும்? என கேட்டாள்.. இந்த மாசம் மார்கழி மாசம் எல்லார் வீட்டிலேயும் அழகா வாசல்ல கோலம் போடுவாங்க அதை நினைச்சா தான்.... நிறுத்திய அம்மாவைப் பார்த்து ஏம்மா! என்ன? என்று கேட்ட கமலாவை மாலா நிமிர்ந்து பார்த்தாள்.




இப்படி உன்னை நிமிர்ந்து பார்த்தாவே தலை சுத்துற மாதிரி இருக்கு, குனிஞ்சு ஏதாவது ஒரு பொருளை எடுத்தாலும் தலை சுத்துற மாதிரி இருக்கு. உனக்கே தெரியும் மார்கழி மாசத்துல நம்ம வீட்டு முன்னாடி  மிகப்பெரிய பெரிய பெரிய கோலமா நான் போடுவேன். டாக்டர் குனிஞ்சி எந்த வேலையும் செய்ய வேணாம்னு சொல்லிட்டார். அதனால என்னால கோலம் போட முடியவில்லை..


நம்ம வீட்டு வாசல்ல கோலம் போடாம இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா வருத்தமா இருக்கு கமலா, நீ தினமும் காலையில நம்ம வீட்டு வாசல்ல ஒரு கோலம் போடுறியா? என்று கேட்டாள்.


"என்னது கோலமா?? எனக்கு படிக்கவே நேரம் இல்ல.. இதுல வேற கோலம் போடுற சொல்றியேமா" என்றாள் கமலா .


"உன்னால முடிஞ்ச சின்ன கோலமா போட்டா கூட ஓகே தான். நாளையிலிருந்து கொஞ்சம் போட்டுருப்பா" என்று தனது கோலநோட்டை மகள் கையில் திணித்தாள்  மாலா..  பதில் ஏதும் சொல்லாமல் கமலா தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.


மறுநாள் காலை வாசலில் தண்ணீர் தெளிக்கும் சத்தம் கேட்டு வந்த மாலா, கமலாவை பார்த்து புன்னகைத்தாள்..  ஏனோ தானோ என்று ஒரு கோலம் போடும் மகளை பார்த்துக் கொண்டே இருந்தார். 


கோலமெல்லாம் போட்டு முடித்து விட்டு உள்ளே சென்ற கமலா, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை பார்க்க ஆரம்பித்தாள். அப்போது அவளுக்கு ஒரே ஆச்சரியம்.. தனது தாய் மாலாவின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ஸில் கமலாவின் கோலம்,,,,, பார்த்தவுடன் கமலாவிற்கு மகிழ்ச்சி பொங்கியது. அம்மா இவ்வளவு நம்மளை மதிக்கிறார்களா என்று மேலும் மகிழ்ந்தாள். பல செய்திகளை அவளின் அம்மா அவளுக்கு அனுப்பி இருந்தார்.


கமலா போட்ட கோலத்தை மாலா தன் தோழிகளின் வாட்ஸ்அப் குழுவிலும் பகிர்ந்து,, அவர்கள் வாழ்த்து தெரிவித்த செய்திகளையும் கமலாவிற்கு அனுப்பினார். பரவாயில்லையே, இந்த காலத்துல,உங்க பெண் கோலம் போடுறாங்களா? இந்த ஜெனரேஷன்ல இப்படி ஒரு பெண்ணா  என் வீட்டு பொண்ணும் இருக்கே !என்ற அவர்களின் உரையாடல் எல்லாம் கமலாவிற்கு அனுப்பப்பட்டது.. கமலா வாசலில் கோலம் போடுவது தொடர்ந்தது...


ஏனோ தானோ என்று ஆரம்பித்த கோலம் போடும் பழக்கம் நாளாக நாளாக கமலாவிற்கு ஆர்வத்தைக் கிளப்பியது.. அம்மாவின்  கோல நோட்டு புத்தகத்தை எடுத்து திறந்து பார்த்து அம்மா இவ்வளவு அழகாக கோலம் போடுவாங்களா?? நானும் ட்ரை பண்றேன் என்று அவள் முயற்சியை தொடர்ந்தாள்.


அன்று ஞாயிற்றுக்கிழமை கமலா இங்கே வாயேன் என்று அழைத்த அம்மாவிடம் போய் என்னம்மா? என்றாள். பால்கனிக்கு வா அங்க பாரு என்று அம்மா காட்டிய இடத்தை பார்த்த கமலாவிற்கு ஒரே ஆச்சரியம்!! 


கமலா வாசலில் போட்டு இருந்த கோலத்தை ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் . என்னங்க கோலம் நல்லா இருக்கா?? என்று மாடியிலிருந்து குரல் கொடுத்த மாலாவை நிமிர்ந்து பார்த்த அவர் ,,"சூப்பரா இருக்குமா, எவ்வளவு அழகா நிதானமா  இந்த கோலத்தை போட்டு இருக்கீங்க நீங்க தானே போட்டது வாழ்த்துக்கள்" என்றார். இல்லை, இல்லை இது எனது மகள் போட்ட கோலம் என்றாள் மாலா. 


என்னது உங்க பொண்ணா?? இவ்வளவு சின்ன பொண்ணா இவ்வளவு அழகா கோலம் போட்டு இருக்கீங்க.  சூப்பர் பாப்பா, உங்க கிட்ட இவ்வளவு திறமை இருக்கே!!  எவ்வளவு நேர்த்தியா இருக்கு.!!. கோலம் போடற லாவகம் உங்கிட்ட இருக்கு பாப்பா. இந்த கோலத்தை போட்டோ எடுத்து என் பொண்ணுங்க கிட்ட காட்டினேன் என்றார் அவர்.

நான் லண்டன்ல வசிக்கிறேன். விடுமுறைக்காக இங்க வந்திருக்கிறோம்.. இந்திய கலாச்சாரம் பற்றி எங்க பெண்களுக்கு சொல்லித் தருவதற்காக வந்திருக்கேன்.




மார்கழி மாசத்துல வீட்டு வாசலில் கோலம் போடுவது நம்மளுடைய பாரம்பரிய வழக்கம் என்பதை என் பொண்ணுங்க ரொம்ப ஆச்சரியமா பாக்குறாங்க .. லண்டன் வாசிங்க ஒரு யூட்யூப் சேனல் நடத்துறோம். அதுல தினமும் உங்க பொண்ணு போடற கோலத்தை அங்க போட்டு கற்றுக் கொடுத்தால் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன் என்றார் ..அதுக்கு பணம் கூட கொடுத்துடுவோம் . உங்க பொண்ணுடைய கோலம் அவ்வளவு நல்லா இருக்கு என்றார்...


கமலா அம்மாவை நன்றியுடன் பார்த்தாள்.ஒரு காரியத்தை தொடர்ந்து முயற்சியோடும் பயிற்சியோடும் செய்யும்பொழுது அது லாவகமாக செய்ய வருகிறது !! இந்த கருத்தை புரிந்து கொண்ட கமலா அம்மாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.


"சார் எங்க அம்மா தான் எனக்கு கோலம் போட கத்து கொடுத்தாங்க.. அவங்க கோல நோட்டுல இருக்குற கோலத்தை தான் நான் தினமும் போடுறேன்.நானும் எங்க அம்மாவும் சேர்ந்தே கூட உங்க youtube சேனல்ல மத்தவங்களுக்கு சொல்லித் தருகிறேன் சார் என்றாள் கமலா. எனக்கு டபுள் ஓகே என்றார் லண்டன்காரர். இரண்டு ஒரு நாட்களில் அக்ரீமெண்ட் போடப்பட்டது.


கமலாவும் மாலாவும் சேர்ந்து நடத்திய கோல வகுப்பிற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்தனர்.. தமிழகத்தின் கோல கலாச்சாரம் லண்டனிலும் பரவியது.. தொடர்ந்து ஒரு செயலை செய்யும் பொழுது அதன் லாவகம் வந்து விடுகிறது.... என்று கமலா அடிக்கடி தன்னுடைய நிகழ்ச்சியில் கூறுவாள். எங்கள் தமிழக கவிஞர் பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் லாகவம்பழகு  என்று எழுதியுள்ளார் என்று கோடிட்டும் காட்டுவாள்... அந்த youtube சேனலுக்கு லாகவம் பழகு என்றே பெயர் சூட்டி இருந்தனர்..


என்ன நீங்களும் லாகவமா கோலம் போட போறீங்களா??