பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

Su.tha Arivalagan
Sep 06, 2025,11:36 AM IST

மதுரை :  தவெக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக வெளியான தகவல்களை அமமுக தலைவர் டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.  அதேசமயம், பாஜக கூட்டணியிலிருந்து அமமுக வெளியேற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனே காரணம் என்று டிடிவி தினகரன் ஆவேசமாக கூறியுள்ளர்.


தனது கூட்டணி குறித்து டிசம்பரில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செங்கோடடையன் ஈரோட்டில் போர்க்கொடி உயர்த்திய நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் டிடிவி தினகரன். அவரது பேட்டியில் இன்று அனல் பறந்தது.


தினகரன் தனது பேட்டியின்போது கூறியதாவது:




 2026 சட்டசபை தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சொன்னதற்காக தவெக., உடன் கூட்டணி என எழுதுவது சரியல்ல. கூட்டணி குறித்து டிசம்பரில் அறிவிப்பேன். 


பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரப்பட்டு எடுத்த முடிவு கிடையாது. நிதானமாக சிந்தித்து எடுத்த முடிவு. 2024 லோக்சபா தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என அண்ணாமலை பேசியதால் பாஜக கூட்டணியில் இருந்து பணியாற்றினோம்.


எடப்பாடி பழனிச்சாமி திருந்துவார் அல்லது திருத்தப்படுவார் என்று நான்கு மாதங்களாகவே எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் அவரது ஆணவம்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிமுக.,வை ஒன்றிணைக்கும் அமித்ஷாவின் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது. அதன் காரணமாகவே தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். 


அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த வரை கூட்டணியை நல்ல முறையில் கையாண்டார். ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் பதில் ஆணவமானது. நயினார் நாகேந்திரனின் செயல்பாடு சரியானது கிடையாது. மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சிக்கு ஜி.கே.வாசன் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.  


ஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவு. கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என எப்படி பாஜக சொல்லும்? நாங்களாக தான் வெளியேறினோம். 2026 தேர்தலில் எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. நயினாருக்கு கூட்டணியை கையாள தெரியவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும் என்றார் டிடிவி தினகரன்.