தவெக-விற்கு ஆதரவு தெரிவித்த காமராஜ் எம்.எல்.ஏ .. அமமுக-விலிருந்து நீக்கம்

Su.tha Arivalagan
May 12, 2026,03:43 PM IST

சென்னை: தமிழக அரசியல் களம் தற்பொழுது ஒரு புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தனது ஆதரவை பகிரங்கமாக அறிவித்த காரணத்திற்காக, அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அக்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வுகளின் போது, அமமுக கட்சியைச் சேர்ந்த காமராஜ் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுத்ததாக ஏற்கனவே சலசலப்பு எழுந்தது. ஆனால் அதை அக்கட்சியின் தலைவர் டிடிவி.தினகரன் திட்டவட்டமாக அறிவித்தார். 


மேலும்  ராத்திரியோடு ராத்திரியாக ஆளுநரையும் சந்தித்துப் புகார் கூறினார். பின்னர் காமராஜையும் உடன் வைத்துக் கொண்டு அடுத்த நாள் பேட்டியும் அளித்தார். அதில் விஜய் பெரிய நடிகராக இருந்தால் என்ன என்றெல்லாம் ஆவேசமாக பேசியிருந்தார்.


இந்நிலையில் இன்று சட்டசபையில் பகிரங்கமாக முதல்வர் விஜய்யை பாராட்டி, எம்எல்ஏ காமராஜ் பேசினார். அவர் பாராட்டிப் பேசப் பேச அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டுப் பார்த்தனர். அன்னிக்கு போலி கையெழுத்து போட்டு விட்டதாக விஜய் மீது குற்றம் சாட்டி அமமுக எம்எல்ஏவா இது என்று அனைவரும் வியந்தும் போயினர். 


டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை :




இந்த நிலையில் டிடிவி தினகரன், காமராஜை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


"கட்சியின் கட்டுப்பாட்டையும், கொள்கைகளையும் மீறிச் சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்த காரணத்தினாலும், கட்சியின் குறிக்கோள்களுக்கு முரணாகச் செயல்பட்டதாலும், காமராஜ் எம்.எல்.ஏ கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்." 


கட்சியின் ஒழுக்கத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த முடிவு உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


காமராஜ் எம்.எல்.ஏ-வின் விளக்கம் :


கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த காமராஜ் எம்.எல்.ஏ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "தவெக-விற்கு ஆதரவு தருவேன்": சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில், தான் தவெக-விற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்தார். 


"சட்டமன்றத்தில் முதலமைச்சரைப் புகழ்ந்து பேசுவது ஒன்றும் தவறான காரியம் இல்லையே?" என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். மேலும், 10 ஆண்டுகளாக அமமுக.,விற்காக உழைத்தேன். அதற்கு கிடைத்த பரிசாக இதை நினைத்துக் கொள்கிறேன். கட்சி தலைமை முடிவு எடுத்தால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதில் எனக்கு வருத்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமமுக-விலிருந்து நீக்கப்பட்ட நிலையிலும், தனது அரசியல் பயணம் தவெக-வை நோக்கியே இருக்கும் என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். 


தமிழக அரசியலில் இதன் தாக்கம் :


நடிகர் விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், பிற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியிருப்பது மற்ற அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜ் எம்.எல்.ஏ-வின் இந்த முடிவு, வரும் காலங்களில் மேலும் பல மாற்றங்களுக்கு வித்திடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக அரசியலின் தற்போதைய 'ஹாட் டாபிக்'காக மாறியுள்ள இந்த விவகாரம், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


காமராஜ் எம்எல்ஏ இப்போது தாராளமாக தவெகவிலேயே போய்க் கூட இணையலாம். கட்சித் தாவல் தடைச் சட்டம் அவரை எதுவும் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அதுதான் நடக்கும் என்றும் தெரிகிறது.