Sri Krishna.. தீராத விளையாட்டுப் பிள்ளை!

Maitreyi Niranjana
Aug 19, 2025,10:37 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


கிருஷ்ண ஜெயந்தி சமீபத்தில் கொண்டாடப்பட்டதால் இந்த கட்டுரை கிருஷ்ணரை பற்றியது..!


ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது கடவுளாக வணங்கப்பட்டாலும் அவருடைய காலத்தில் ஒரு விளையாட்டு பிள்ளையாகவும் மன்மத லீலைகளில் ஈடுபடுபவராகவும் (PlayBoy)  தான் அப்போதைய மக்கள் கருதினர்.. அவர் ஒரு மகா புருஷர்.. தெய்வ நிலையில் மனித உருவத்தில் இருப்பவர் என்று மிகச் சிலரே அறிந்திருந்தனர்..


அவருக்கு பக்தர்களும் இருந்தனர்.. எதிரிகள் மிக அதிக அளவில் இருந்தனர்.. கடவுள் தன்மை என்பது உண்மையில் என்ன? 


ஒருவேளை கிருஷ்ணர் இப்போதைய உலகில் அவதரித்தால், இன்றைய காலத்தின், பத்தாவது / பன்னிரண்டாவது தேர்வில் தேர்ச்சி பெறாமல் போகக்கூடும்..(Probably)..  எதுவும் நிச்சயமும் இல்லை.. ஏனெனில் தெய்வத்தன்மை என்பது வரையறைக்கு அப்பாற்பட்டது.. இந்த வாழ்க்கை துன்பம் இன்பம் என்ற இருமைக்கு (Duality) அப்பாற்பட்டது அல்ல.. பகல் இல்லாமல் இரவு இல்லை!




இந்த இருமை வாழ்க்கையிலும் நிதானமும் முழுமையும் ஆனந்தமும் ஒரு நிலையாக கொண்ட ஆத்மத் தன்மை…எல்லை இல்லா தன்மை என்று கூறலாம்.. கிருஷ்ணர் அவருடைய பக்தர்களிடத்தில் மிக்க அன்பு கொண்டவர்.. பக்தர்களின் அன்பு எவ்வளவு ஆழமோ அதை அப்படியே பிரதிபலிக்கக் கூடியவர்  என்று கூறலாம்.. அவருக்கு பிடிக்காதது ஒன்றுதான்.. தன் பக்தர்களிடம் சிறிது கர்வத் தன்மை காணப்பட்டாலும் அவர் விளையாடி பார்ப்பது உண்டு..


கிருஷ்ணர் தன்னிடம் தான் மிக்க அன்பு கொண்டிருப்பதாக அவரது மனைவி ருக்மணி சிறிது கர்வம் அடைந்தபோது.. கிருஷ்ணர் ஒரு லீலையைச் செய்தார்.. அந்த லீலை பற்றி அறிவோமா? 


ருக்மணி ஒரு நாள் கிருஷ்ணர் சேவையில் ஈடுபட்டிருந்த போது,  கிருஷ்ணர் இவ்வாறு பேசலானார்.  "அழகிலும் நாகரிகத்திலும் மிகச் சிறந்து விளங்கும் என் அன்பு மனைவியே.. எனக்கு வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லை! வீரத்திலும் அப்படி ஒன்றும் சிறந்தவனும் இல்லை! எனக்கென்று சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ராஜங்கமும் இல்லை".. என்றுபல விஷயங்களை சுட்டிக்காட்டி விளக்க ஆரம்பித்தார்..


என்னை கல்யாணம் செய்து கொண்டு இறுதி வரை இன்பங்களை அனுபவிக்கவும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.. எத்தனையோ அரசகுமாரர்கள் உனக்காக தவம் இருக்க என்னை ஏன் திருமணம் செய்து கொண்டாய்..? இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை.. நான் உனக்கு விவாகரத்து அளிக்கவும் சித்தமாக உள்ளேன்.. நீ செல்வத்தில், வீரத்தில் மற்றும் அழகில் சிறந்து விளங்கும் உனக்கு விருப்பமான  ராஜகுமாரனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறலானார்.. மேலும் இந்த இல்லற வாழ்க்கையில் எனக்கு எந்த பற்றுதலும் இல்லை.. அதனால் உன் மீதும் எந்த பற்றும் கிடையாது என்றார் கிருஷ்ணர்.


ருக்மணியோ, கிருஷ்ணரிடம் பேரன்பு கொண்டிருப்பவர்.. அவருக்கு சேவை செய்வது ஒன்றை தன் வாழ்க்கையாக்கி கொண்டவள்.. இப்படி இருந்தாலும், அந்த சிறிதளவு கர்வம்.. 


கிருஷ்ணர் தன்னை விலகி விடவும் வாய்ப்புள்ளது என்று கலவரப்பட்டு மிகவும் அழ ஆரம்பித்த ருக்மணி மயங்கி தரையில் சரிகிறாள்.. 


அவளின் உண்மை நிலையை..  உணர்ந்த கிருஷ்ணர் மனமிரங்கி கருணை ஆட்கொண்டு தன் மனைவியை சமாதானப்படுத்துகிறார்.. அவர் "உன்னிடம் விளையாட்டாக நான் சொன்னதை ஏன் தவறாக புரிந்து கொண்டாய்? நீ கோபப்பட்டு என்னை அடிப்பாய் என்று நினைத்தேன்".. என்று கூறி சிரிக்கிறார்.. அவளின் கண்ணீர் துடைத்து சமாதானப்படுத்தவும்..


ருக்மணி எழுந்து, "நீங்கள் மகா புருஷன்.. பரமாத்மா.. இந்த ஜட உலகின் மீதும்.. இந்த ஜட உலகிற்கான பொருட்களின் மீதும் இன்பங்களின் மீதும் நீங்கள் பற்றற்றவர்.. உங்கள் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் விடுதலை அளிக்கக்கூடிய சக்தி பெற்றவர்.. உங்களின் பாதக்கமலங்களில் எப்போதும் உறுதி பெற்றிருக்க வரத்தை மட்டுமே வேண்டி நிற்கிறேன்"..  என்கிறாள். கிருஷ்ணரும் அவளுடைய அன்பின் ஆழத்தை அவளின் வார்த்தைகளால் வெளிக்கொணர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்.


தனது பக்தர்கள்,  இவ்வுலக சாதனத்தில் பற்று கொண்டால் அந்த சாதனத்தை அவனிடமிருந்து பறித்துக் கொள்ளவும்.. அவன் பற்று அற்றவனாக வாழ்வதற்குண்டான சூழ்நிலையை உருவாக்கி தருவதும் கிருஷ்ணருடைய இஷ்டமான விளையாட்டுகளில் ஒன்று.


ஆத்மா பரமாத்மா இரண்டு அல்ல.. எங்கும் நிறைந்திருப்பது எதிலும் நிறைந்திருப்பது முழுமையானது..


ஹரே ராம ஹரே கிருஷ்ணா! 


நாம் தொடர்வோம்..


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.