Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
- ஆனந்தி சத்தியராஜ்
ஒரு வாரமாக சோஷியல் மீடியா பக்கம் போனாலே ஒரே 80s ரெட்ரோ மயம் தான்! வண்ணமயமான அந்தக்கால ஆடை, ரெட்ரோ ஹேர்ஸ்டைல், பின்னணியில் ஒலிக்கும் பாப் இசை என நம்மை அப்படியே சுமார் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. நம் பழைய புகைப்படங்களை அந்தக்கால திரைப்பட நாயகன், நாயகி போல மாற்றிப் பார்க்கும்போது உண்மையிலேயே மனசுக்குள் ஒரு தனி மகிழ்ச்சிதான்!
உண்மையைச் சொல்லப்போனால், நானும் இந்த மோகத்திலிருந்து தப்பவில்லை! 'கிரேஸி மோடில்' எங்களது வீடியோக்களையும் புகைப்படங்களையும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கி மிகவும் ரசித்து மகிழ்ந்தோம். ஆனால், இன்று என் தோழி அனுப்பிய "How much does AI drink our water?" என்ற ஒரு ஃபார்வர்டு மெசேஜ் என்னைச் சற்று சிந்திக்க வைத்தது!
எங்கோ எப்போதோ நடிகர் கமல்ஹாசன் அவர்கள் "நாம் AI-யிடம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் வீணாகிறது!" என்று ஒரு மேடைப் பேச்சில் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக அவர் பேசுவது மிகவும் ஆழமான கருத்துக்கள் என்பதால் பலருக்கு உடனடியாகப் புரியாது. ஆனால், அதை மற்றொருவர் எளிமையாக ஆராய்ந்து கூறும்போது அதன் தீவிரத்தன்மை விளங்குகிறது. பல மாதங்களுக்கு முன்பு கேட்ட அவர் பேச்சின் ஆபத்து இன்று எனக்குப் புரியத் தொடங்கியது.
பொழுதுபோக்கிற்காக எப்போதாவது AI பயன்படுத்துவது போய், இப்போது வேலை, தூக்கம் என்று எதையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் ஒரு வீடியோவை உருவாக்கச் செலவழித்ததை எண்ணி சற்று வருத்தப்பட்டேன். 'இப்படியே போனால் இதில் முழுதும் சிக்கிவிடுவோமே!' என்று எண்ணியபோது, "இது என்ன பெரிய குற்றமா?" என்று ஒரு பக்கம் மனம் கேட்டாலும், "இதில் என்னதான் பாதிப்பு இருக்கிறது?" என்று கொஞ்சம் ஆராயத் தொடங்கினேன்.
AI பற்றி AI- இடமே தேடுவதா? சரி, நம் அறிவை வைத்து யோசிக்கலாம் என்று பார்த்தால், இப்போதெல்லாம் பொதுவான செய்திகளைப் பார்ப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. காரணம் நாட்டம் இல்லாமையா? அல்லது செய்திகளில் உண்மைத்தன்மை இல்லாமையா? என்பது தனி ஆராய்ச்சி! சரி, முதலில் AI கதையை யாரிடம் கேட்பது? அவ்வப்போது எனக்கு செய்தி வாசிப்பாளர் பணியைச் செய்யும் என் கணவரிடமே கேட்டேன்.
அண்டம் முழுதும் உள்ள மனிதர்களிடம் காற்றைப் போல இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த AI மாயையின் திடுக்கிடும் உண்மைகள் என்னைச் சற்று உறைய வைத்தன! நாம் உருவாக்கும் ஒவ்வொரு AI புகைப்படத்திற்கும் பின்னால் பிரம்மாண்ட 'டேட்டா சென்டர்கள்' (Data Centers) இயங்குகின்றன.
ஒரு AI வீடியோவை உருவாக்கத் தேவைப்படும் மின்சாரம், நமது ஸ்மார்ட்போனை பல நாட்கள் சார்ஜ் செய்வதற்குச் சமம்! இந்த சர்வர்கள் இடைவிடாமல் வேலை செய்யும்போது வெளிப்படும் கடும் வெப்பத்தைத் தணிக்க, கோடிக்கணக்கான லிட்டர் தூய நன்னீரும் (Fresh Water) மின்சாரமும் குளிரூட்டியாகப் பயன்படுத்தப்பட்டு, நீராவியாக மாறுகிறது.
பின்லாந்து (Finland), டென்மார்க் போன்ற கடும் குளிர் நிலவும் நாடுகள், இந்த AI சர்வர்கள் வெளியிடும் வெப்பத்தைப் பயன்படுத்தி நீரைச் சூடேற்றி வீடுகளுக்கு விநியோகிக்கும் 'தெர்மல் எனர்ஜி' (Thermal energy) திட்டமாகப் மாற்றுகின்றன.
குளிர் பிரதேசங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் இந்தியா, இலங்கை, அரபு நாடுகள், ஆப்பிரிக்கா போன்ற ஏற்கனவே அதிக வெப்பம் நிலவும் நாடுகளுக்கு இது ஆபத்தானது! ஏற்கனவே வெயில் சுட்டெரிக்கும் நம் நாடுகளில், இந்த மெகா டேட்டா சென்டர்கள் நமது குடிநீரையும் மின்சாரத்தையும் உறிஞ்சி, நிலப்பரப்பின் வெப்பநிலையை மேலும் உயர்த்தும்.
இந்தியாவில் இயங்கும் டேட்டா சென்டர்கள் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 150 பில்லியன் லிட்டர் நன்னீரை உறிஞ்சியுள்ளன! இது 2030-க்குள் ஏறக்குறைய 358 பில்லியன் லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், நம் நாட்டில் இயங்கும் இந்த டேட்டா சென்டர்களின் 66% கட்டுப்பாடு வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில்தான் உள்ளது. நமது ஊர் தண்ணீரும் மின்சாரமும்தான் கணக்கின்றிச் செலவாகிறது.
"ஒரு புகைப்படத்திற்கு இவ்வளவு பேச வேண்டுமா?" என்று தோன்றலாம். ஆனால் 'ட்ரெண்ட்' என்ற பெயரில் நமது இயற்கை வளங்களை நாமே பலிகொடுக்க வேண்டுமா?
அந்நியன் படத்தில் வருவதுபோல, "ஒருத்தர் 5 பைசா திருடினா தப்பு இல்லை... ஆனா 5 கோடி பேர் ஆளுக்கு 5 பைசா திருடினா அது 25 லட்சம் ரூபாய் சார்!" என்பது போலத்தான் இதுவும். நாம் ஜாலிக்காக உருவாக்கும் ஒரே ஒரு புகைப்படம் சிறிய விஷயமாகத் தோன்றலாம்.
ஆனால், உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆளுக்கொரு புகைப்படம், வீடியோ என உருவாக்கும் போது, அது பில்லியன் கணக்கான லிட்டர் குடிநீரையும் மின்சாரத்தையும் உறிஞ்சி மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவாக மாறுகிறது.
நீர்ச் சுரண்டலின் பின்னணியைப் பற்றித் தேடியபோது, நடிகர் கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படத்தில் சொல்லப்பட்ட குடிநீர் வணிகம் தொடர்பான விஷயங்கள் நினைவுக்கு வந்தன. அப்படத்தை மீண்டும் பார்த்தபோதுதான் இதன் தீவிரமும், குடிநீரின் முக்கியத்துவமும் இன்னும் எளிதாகப் புரிந்தது.
இதைப் படிக்கும்போது, "ஆரம்பித்துவிட்டார்கள்... யாராவது கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருந்தால் தப்பு, சரி, அழியுது, மறையுது என்று கதை அளக்க வந்துவிடுவார்கள்!" என்றுதான் பலருக்குத் தோன்றும். ஆனால், சற்று ஆழமாக யோசித்தால் இதன் பேரழிவு விளைவுகள் புரியும்.
முன்பெல்லாம் ஒரு தகவலைத் தேட அகராதிகளையும் (Dictionary) புத்தகங்களையும் புரட்டிய நாம், இன்று எழுதுவதற்கு, பேசுவதற்கு, ஏன் ஒரு தலைவலி, வயிறுவலி என்றால் கூட AI-யைத்தான் முதலில் கேட்கிறோம். நன்றாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்னும் மெருகேற்ற 100 முறை மாற்றித் தயாரிக்கிறோம். இப்படி எல்லோரும் வரம்பில்லாமல் முயற்சித்தால் இதற்கு என்னதான் தீர்வு?
நான் AI தொழில்நுட்பமே வேண்டாம் என்று சொல்லவில்ல. எங்கெல்லாம் நம் மூளையையும் உழைப்பையும் பயன்படுத்த முடியுமோ, அங்கெல்லாம் நமது நேரடி செயல்பாடே இருக்க வேண்டும். நம்மால் முடியாத விஷயங்களுக்கு அல்லது ஆழ்ந்த தகவல்களைத் தெரிந்துகொள்ள மட்டும் AI-யைப் பயன்படுத்துவோம் என்று ஒரு சுயக்கட்டுப்பாடு வைத்துக்கொண்டால் நல்லது!
ஏற்கனவே மண்ணையும் நீரையும் சுரண்டி, புவி வெப்பமயமாதல் (Global warming), சுற்றுச்சூழல் மாசுபாடு என ஆபத்தான பாதையில் பயணிக்கிறோம். 80s ரெட்ரோ ட்ரெண்டைத் தொடர்ந்து அடுத்து என்ன ட்ரெண்ட் வருமோ தெரியாது. இப்படி ஒவ்வொரு பெயரிலும் உருவாகும் எண்ணற்ற புகைப்படங்களும் வீடியோக்களும் புவி வெப்பத்தை இன்னும் அதிகரிக்கும்.
முடிந்த அளவு நம் மண்ணையும் இந்த உலகத்தையும் ஆரோக்கியமாக அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்ல முயல்வோம். நாம் ஏற்கனவே உருவாக்கிய புகைப்படங்களைப் பார்த்து மகிழ்வோம்! இனி AI-யின் பயன்பாட்டை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்!
என்னுடைய இந்த பதிவு எத்தனை பேரை சென்றடையும் என்று தெரியாது; சிலர் இதை விமர்சிக்கலாம், சிலருக்கு இது ஒரு பொருட்டாக இல்லாமல் போகலாம். ஆனால், விச்சுரப் பெருங்கடலின் ஆழத்திலும் ஒரு சிறிய மீன்குட்டியின் துடிப்பு மாபெரும் அலைகளை உருவாக்கவல்லது! பிரம்மாண்டமான ஆழிக்கடல் என்பது பல கோடிச் சிறு துளிகளின் சேர்க்கைதானே? AI எனும் பெருங்கடலில் மூழ்கியிருக்கும் மனிதகுலத்திற்கு, எனது இந்தச் சிறிய பதிவு ஒரு துளியாகச் சென்றடையும் என நம்புகிறேன்.
நாம் மேற்கொள்ளும் சுயக்கட்டுப்பாடு எனும் சிறு புள்ளி, நாளை நமது பூமியைக் காக்கும் பேரலையாக மாறட்டும்!
ஒவ்வொருவரின் சின்ன மாற்றம்... நாட்டின் பெரிய பாதுகாப்பு!
(கட்டுரையாளர் ஆனந்தி சத்தியராஜ் எழுதியுள்ள பிற கட்டுரைகளை இங்கு படிக்கலாம்)