நிறை குடம்

Su.tha Arivalagan
Mar 20, 2026,04:22 PM IST

- ஆனந்தி. ச


வெளியில் மழை தூறால் ஏற்பட்ட மண்வாசனையை முகர்ந்தபடியே ஜன்னல் வழியாக மழைச்சாரலை ரசித்துக்கொண்டிருந்தாள் மீனு.


இன்று அவளுக்கு விடுமுறை நாள் .காலை வழக்கம் போலவே 5 .30க்கே எழுந்துவிட்டாள். படுக்கையில் புரண்டபடி அரைமணிநேரம் செலவழித்துவிட்டு படுக்கையிலிருந்து எழுந்து சமையலறையில் காபி போட்டு கையில் எடுத்தவள் , ஹாலில் இருந்த ஜன்னலில் பக்கம் அமர்ந்து மண்வாசனையும் மழைச்சாரலலையும் ரசித்தபடியே காபியை பருகியபடியே மீனு.


வீட்டில் உள்ள யாருமே இன்னும் எழுந்திரிக்கவில்லை. தீடீரென்று மழை.


நேற்றுவரை நல்ல வெயில் அடித்தது . இன்று விடுமுறை அதனால் வத்தல்  புழிந்து வைக்கலாம் என்று எண்ணியிருந்தாள், ஆனால் வேலையின் அசதியால் முன்னேற்பாடுகளை செய்ய மறந்திருந்தாள் .


“ம்ம்ம் அதுவும் நல்லதுக்குதான் போலும் “ முனுமுனுத்தது அவள் உள்ளம்.


அவள் இந்த வெயில் காலங்களில் எப்பொழுது வத்தல் வடாம் செய்ய நினைத்தாலும் மழை வந்துவிடுகிறது. எதிர் வீட்டு மஞ்சு கூட அடிக்கடி அவளை விளையாட்டாக கலாய்ப்பதுண்டு.


“மீனு அக்கா வத்தல் போடலையா? வெயில் தாங்கல மழை வந்தா நல்லா இருக்கும் “ என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் சிரிப்பதுவும் உண்டு. மீனுவும் அவளை பார்த்து சிரித்த படியே பதிலேதும் கூறாமல் கடந்துவிடுவாள்.




மீனுவிற்கு ஆறு நாத்தனார்கள் மற்றும் இரண்டு மைத்துனர்கள். அனைவரும் மெத்த படித்து மிகப்பெரிய பதவியில் இருப்பவர்கள்.மீனு பார்க்கும் அலுவலக பணிக்கு முன் அவர்களின் பதவி பெரியதுதான். அவளின் ஓரகத்திகளும் நல்ல பதவியிலிருப்பவர்கள்தான் .அவர்கள் அனைவரின் முன்னே மீனு ஒன்றுமில்லாதவள்தான்.


ஏதாவது பண்டிகை வந்தால் அனைவரும் ஒன்று சேரும் பொழுதும் மீனுவை மட்டம் தட்டி பேசுவதே அவர்களின் வழக்கம்.  இதல்லாம் பழகிபோனதால் மீனு எதையும் பெரிதாக நினைப்பதில்லை ,அதை பெரிதுபடுத்துவதும் இல்லை. எத்தனை முறை அவளை கேவலப்படுத்தினாலும் , ஓர் புன்முறுவல் மட்டுமே அவளின் பதிலாக இதுவரை இருந்திருக்கிறது.


மழையை பார்த்ததும் மனதில் கவிதை தோன்ற அதை மனதில் பதிய வைத்தாள் மீனு. அவளுக்கு மழையில் நனைய பிடிக்கும் .. நனைந்தபடியே ஐஸ்கிரீம் சாப்பிட பிடிக்கும் . மழையில் கடற்கரைக்கு செல்ல பிடிக்கும் கடலில் மழையில்

நனைந்தபடி கால் வைக்கப்பிடிக்கும் . ஆனால் வீட்டில் உள்ள யாருக்கும் இது பிடிக்காது . “நீ என்ன சின்ன புள்ளையா ?என எகத்தாளம் செய்வதுடன் அவளின் உணர்வுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.


வெளியில் மழையை பார்த்ததும் ஆனந்த பெருக்கெடுக்க ,வெளியில் உள்ள பொருட்களை மழையிலிருந்து பாதுகாக்கும் சாக்கில் மழையில் நனைந்து ஆனந்தமடைந்தாள். இன்னும் மூன்று வாரங்களில் அவர்களின் சொந்த ஊரில் திருவிழா நடக்க இருக்கிறது . 


லீவுக்கும் முன்னதாகவே சொல்லியுமாகிற்று .. பயண ஏற்பாடுகளை செய்யவேண்டும் . இன்று விடுமுறையானதால் செய்யவும் தொடங்கிவிட்டாள் மீனு.


திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு வந்தாகிவிட்டது .. கோவிலில் பொங்கல் வைக்க வேண்டும் . ஆறு நாத்தனாரின் குடும்பங்கள் , இரண்டு ஓரகத்தியின் குடும்பம் மற்றும் மீனுவின் குடும்பம் என்று ஊரே களை கட்டியிருந்தது.  எல்லோரும் சேர்ந்தால் கலாட்டாவிற்கா பஞ்சம் .. சிரிப்பும் கும்மாளமும் பக்கத்து ஊருக்கே கேட்டிருக்கும். அத்தனை சிரிப்பு வெடிகள் .


இதில் பெரும்பான்மையான கலாட்டா மீனுவை மையப்படுத்தியே இருந்தது.


வழக்கம்போல் மீனுவும் அசராமல் வெறும் புன்முறுவல் .. சிரிப்பு கூட இல்லை. அவர்களிடம் கோபத்தையும் காட்டவேயில்லை.


“பொறுமையின் மறுபெயர் மீனு தானோ ? “என்பது போல் அமைதியாக  அனைத்தையும் கடந்தாள் மீனு.


அவளுக்கென்று ஓர் நாள் வராதா? என்ன ? வரும்பொழுது பார்த்துகொள்ளாலாம் . அதுவரை “பொறு மனமே பொறு “

அவளின் உள் மனம் கூறிக்கொண்டேதான் இருந்தது..


திருவிழா நல்லபடியாக முடிந்தது . அனைவரும் வேனில் ஏறி பாட்டும் கும்மாளமுமாக ஊர் திருப்பிக்கொண்டிருந்தனர். தனித்தனியாக வந்தாலும் ஒன்றாகவே ஊர் திரும்புவது அவர்களின் வழக்கம் . பாதி வழியில் என்னவாயிற்று எனத்தெரியவில்லை வந்த வேன் நின்றுவிட்டது .


யாருக்கும் எதுவும் புரியவில்லை .. வேன் ஓட்டுநர் மட்டுமே இருந்த நிலையில் அவரும் பதட்டத்தில் நிலை தடுமாறிக்கொண்டிருந்தார்

மீனுவின் குடும்பத்திலுள்ளவர்களோ ஓட்டுநரை குறை சொல்லியபடியே இருந்தனரே தவிர வேறொன்றும் செய்யவில்லை , செய்ய முற்படவுமில்லை. பத்து நிமிடங்கள் பொறுமையாக இருந்த மீனு தன் செல்போனை எடுத்து எமர்ஜென்ஸி ஹெல்ப் லைன்னை தொடர்பு கொண்டு .. ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசி ஏதேதோ கூறுவதை பார்த்த குடும்பத்தினர் வாயடைத்து போனர் .


அவளின் அழைப்பிற்கு அரைமணியில் வந்த உதவியாளர்களிடமும் இந்தி கலந்த ஆங்கிலத்தில் பேசி அசத்தினாள் மீனு. இருபது நிமிடங்களில் சரி செய்யப்பட்ட வேன் அவ்விடத்தை விட்டு கிளம்பத்தொடங்கியது .


தன் இருக்கையில் அமர வந்தவள் , அனைவரின் பார்வையிலும் ஆணவம் அழிந்து மரியாதை தெரிந்ததை மீனுவால் உணர முடிந்தது. நிறை குடம் என்றுமே தழும்பாது .. குறைகுடம் என்றுமே கூத்தாடிக்கொண்டிருக்கும்.

  

(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)