சிறையில் அன்பில் மகேஷ்...திமுக.,வில் அடுத்து சிக்க போவது யார்? எல்லாம் இவர் கையில் தான் இருக்கு

Su.tha Arivalagan
Oct 28, 2026,12:45 PM IST

சென்னை : தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சமீபத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் திமுக.,வில் அடுத்து சிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


அன்பில் மகேஷ் கைது ஏன்?


2004ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற பள்ளி தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசு, பள்ளிகளுக்கான சட்டங்களை கடுமையாக்கியது. இதனால் தனியார் பள்ளிகளின் தரத்தை வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து, பள்ளி நடத்துவதற்கான அனுமதி புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் 3500 க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் ஆய்வு செய்து, அனுமதி வழங்க அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 2024ம் ஆண்டு, முந்தைய திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளி உரிமையாளர்களை அழைத்து, "ஆண்டுக்கு ஒருமுறை அனுமதி பெறுவதற்கு பதிலாக மொத்தமாக 10 ஆண்டுகளுக்கு அனுமதி தருகிறோம். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை திமுக நிர்வாகிகளான அரசகுமார் மற்றும் முத்துகுமாரிடம் கொடுத்து விடுங்கள்" என கூறி உள்ளார். 


பலர் பள்ளி உரிமையாளர்கள் ரொக்கமாக பணத்தை கொடுத்த நிலையில், சிலர் ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பி உள்ளனர். அப்படி ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் கொடுத்த சிலர் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரின் பேரில், முத்துக்குமார் என்பவர் அனமதி வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக மோசடி புகார் அளித்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட அரசகுமார் அளித்த வாக்குமூலத்தில், அன்பில மகேஷ் மற்றும் அவரது மனைவி ஜனனி ஆகியோருக்கு பல கோடிகள் பகிரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விவகாரத்தில் தான் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.


மகேஷூக்கு ஜாமீன் கிடைக்குமா?




ரூ.100 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு தான் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, தனக்கு கல்லீரல் அழற்சி நோய் இருப்பதால் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டி உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மகேஷ் சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (அக்டோபர் 29) விசாரணைக்கு வர உள்ளது. ஆனால் ஏற்கனவே மகேஷின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி லட்சுமி நாராயணன் சொன்ன காரணம், முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதால் சாட்சிகளை கலைத்து விடுவார். விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவார் என்பதால் மகேஷிற்கு முன்ஜாமீன் தர முடியாது என தெரிவித்திருந்தார். புழல் சிறைக்கு அழைத்து செல்வதற்கு முன் மகேசுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்த்தால் மகேஷூக்கு ஜாமீன் கிடைப்பது சந்தேகம் தான். 


அடுத்து என்ன நடக்கும்?


நவம்பர் 06ம் தேதி நீதிமன்ற காவல் முடிந்ததும் மீண்டும் மகேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது காவல்துறை சார்பில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்படலாம். ஒருவேளை கோர்ட் அனுமதித்தாலும், தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் கைது செய்யப்படும் வரையிலும் மகேஷ் சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.


திமுக.,வில் அடுத்து சிக்க போவது யார்?


தவெக அரசு பொறுப்பேற்று 5 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்து திமுக.,வில் கைது செய்யப்பட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா போன்றவர்கள், ஒரு ஃபைல் ஓபன் செய்ததற்கே ஒருவர் சிறைக்கு சென்று விட்டார் என கூறி உள்ளார்கள். முதல்வர் விஜய் சொன்னபடி இன்னும் 2 ஃபைல் எந்த துறை சார்ந்தது? யாருக்கு தவெக குறி வைக்கிறது? என்ற பரபரப்பு எழுந்துள்ளது. 


யார் கையில் இருக்கு?


முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் தான் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த நடவடிக்கையால் கைது செய்யப்படவில்லை. மகேஷ் மட்டுமல்ல திமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் லஞ்சம், ஊழல் வழக்குகள் தான் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை தான் விசாரித்து, வழக்குப்பதிவோ அல்லது நடவடிக்கையோ எடுக்க வேண்டும். அமைச்சர் நிர்மல் குமார் வசம் மின்சாரம், சிறைத்துறை, சட்டத்துறை என பல முக்கியத்துறைகள் இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையில் அவரால் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் இருப்பது தான் திமுக முன்னாள் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அமைச்சர் நிர்மலா குமார் லஞ்ச ஒழிப்புத்துறை பணிகளில் தீவிரம் காட்டினாலோ அல்லது முதல்வர் விஜய் நேரடியாக தலையிட்டால் மட்டுமே திமுக.,வின் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.