பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தற்போது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அன்புமணி ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பாமக.,வின் கட்சி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி தரப்பிற்கு தேர்தல் கமிஷன் வழங்கியதை எதிர்த்து, தேர்தல் சின்னத்தை முடக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவர் ராமதாஸின் உடல்நிலை மற்றும் வயது குறித்து முக்கியக் கருத்துகளை முன்வைத்துள்ளார். அதில், "மருத்துவர் ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிவிட்டது. வயது முதிர்வு மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் தற்போது சுயமாக எந்தவொரு நிர்வாக முடிவுகளையும் எடுக்க இயலாத நிலை உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, சில நபர்கள் மருத்துவர் ராமதாஸை தவறாக வழிநடத்தி வருவதாகவும் அன்புமணி தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். அத்தகைய நபர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் மூலமாகவே இந்த சட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாமக-வின் தலைவராகத் தன்னை ராமதாஸ் அறிவித்துக் கொண்டது குறித்து அந்த மனுவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. "ராமதாஸ் தன்னை பாமக தலைவர் என அறிவித்துக் கொண்டது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. கட்சியின் நிறுவனராக மட்டுமே அவர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க முடியும். அதற்கு அப்பாற்பட்டு அவர் எடுக்கும் முடிவுகள் செல்லத்தக்கவை அல்ல" என்று அன்புமணி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
மருத்துவர் ராமதாஸ் ஏற்கனவே ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்த நிலையில், அந்த வழக்கையே நிராகரிக்க வேண்டும் என்று கோரி அன்புமணி தற்போது மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை சிவில் நீதிமன்றம், இது குறித்து வரும் மார்ச் 11-ஆம் தேதிக்குள் மருத்துவர் ராமதாஸ் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பாமக-வின் தந்தை - மகன் இடையிலான இந்தத் சட்டப் போராட்டம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 11 அன்று ராமதாஸ் தரப்பு அளிக்கப்போகும் பதில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.