பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
சென்னை : பாமக.,வில் இருந்து அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக தலைமை நிலைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாமக.,வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருப்பவர் ஜி.கே.மணி. இவர் கட்சிக்கு எதிராக சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்டும், இந்த குற்றத்திற்காக ஏன் அவரை கட்சியின் கெளரவ தலைவர் பதவியில் இருந்து நீக்கக் கூடாது என கேட்டும் ஜி.கே.மணிக்கு டிசம்பர் 18ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்காததால், இன்று அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி தரப்பின் இந்த அறிவிப்பால் பாமக.,வில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. பாமக.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கு மிகவும் நெருக்கமானவராகவும் பல ஆண்டுகளாக இருந்து வரும் மூத்த தலைவர் ஜி.கே.மணி. அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதற்கு ராமதாஸ் தரப்பின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாமக.,வில் அடுத்து என்ன நடக்கும், கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.