ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
ஸ்ரீகாகுளம் ; ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த கோவில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், இந்த நிகழ்ச்சி குறித்து அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், காசிபுக்கா பகுதியில் தனிநபரால் கட்டப்பட்ட வெங்கடேஸ்வரா கோவிலில் ஐப்பசி ஏகாதசியை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் கூடியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விளக்கினார். "கூட்ட நெரிசலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். ஐப்பசி ஏகாதசியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கூடியதால், காசிபுக்கா பகுதியில் தனிநபரால் கட்டப்பட்ட வெங்கடேஸ்வரா கோவிலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. துரதிர்ஷ்டவசமாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல்துறைக்கோ அல்லது உள்ளூர் அதிகாரிகளுக்கோ இது குறித்து தெரிவிக்கவில்லை. அவர்கள் எங்களுக்குத் தெரிவித்திருந்தால், நாங்கள் காவல்துறை பாதுகாப்பை வழங்கி கூட்டத்தைக் கட்டுப்படுத்தியிருப்போம். இந்த ஒருங்கிணைப்பு இல்லாததால், பத்து பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்" என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர், கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். "ஒரு உயிர் கூட இழக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு உறுதிபூண்டுள்ளது, ஆனால் தனிப்பட்ட நிகழ்ச்சிகளின் போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முழுமையான விசாரணை நடத்தப்படும், மேலும் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
முதலமைச்சரின் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், உள்ளூர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார். "இந்த துயரச் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன், மேலும் பொதுப் பிரதிநிதிகள் இந்த முயற்சிகளை மேற்பார்வையிடவும் கேட்டுள்ளேன்" என்று அவர் கூறினார்.
கூட்ட நெரிசல் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. கோவிலில் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் ஒரே பாதை நுழைவு வாயில் மட்டுமே இருந்ததாலேயே இந்த நெரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.