தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Su.tha Arivalagan
Jul 06, 2026,04:54 PM IST

சென்னை: தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் புதிய அமைச்சரவை குறித்து வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் கே. அண்ணாமலை வெளிநாட்டில் முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தவெக அரசுக்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


ஓராண்டு காலம் அவகாசம் தேவை :

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு நாம் ஓராண்டு காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். "அதுவரை அவர்களுக்கு எந்தவிதமான தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் நாம் போடக்கூடாது" என்று அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.


புதிய அமைச்சர்களுக்குக் கால அவகாசம்




மேலும், அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் குறித்துப் பேசிய அவர், "புதிதாக வந்துள்ள அமைச்சர்களுக்குப் போதிய கால அவகாசம் கொடுக்காமல், அவர்களால் எப்படி உடனடியாகச் சிறப்பாகச் செயல்பட முடியும்?" என்ற கேள்வியை எழுப்பினார். புதியவர்கள் தங்களை நிரூபிக்க நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.


ஊழலுக்கு எதிரான தொடர் போராட்டம் :

தன் மீதான விமர்சனங்கள் மற்றும் வழக்குகள் குறித்துப் பேசிய அண்ணாமலை: ஊழலுக்கு எதிராகத் தான் தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காகத் தனிப்பட்ட முறையில் பல்வேறு சட்ட ரீதியான வழக்குகளைத் தான் எதிர்கொண்டு சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நல்ல திட்டங்களுக்கு வரவேற்பு

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு மக்களுக்கு நல்லது செய்தால், அதனை முதல் ஆளாக நின்று நாம் வரவேற்போம் என்று கூறினார். குறிப்பாக, ஊழலைக் கட்டுப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் மனப்பூர்வமாக வரவேற்போம் என்றும், மக்கள் நலனே தங்களுக்கு முக்கியம் என்றும் அண்ணாமலை அந்த நிகழ்வில் பேசினார்.


தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் மற்றும் கூட்டணி கணக்குகள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.