கேஸ் சிலிண்டர் இல்லை.. பிறந்த நாளும் இல்லை.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை கண்டனம்

Su.tha Arivalagan
Mar 14, 2026,01:21 PM IST

சென்னை: கேஸ் சிலிண்டர் பிரச்சினை நிலவுவதால் தனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்று தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளதற்கு முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரும், வடக்கு மண்டல திமுக பொறுப்பாளருமான எ.வ.வேலு போட்டிருந்த எக்ஸ் தளச் செய்தியில், அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், மார்ச் 15 அன்று தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைஇருப்பதால், எனது பிறந்தநாளை கொண்டாடுகின்ற மனநிலையில் நான் இல்லை.


ஆகையால் கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தோழமைக்கட்சியை சார்ந்த அன்பர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இதற்குத்தான் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




கடந்த ஆண்டு வரை, தனது பிறந்தநாளுக்கு, சமூக வலைத்தளங்களில் தானே போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்தான் திமுக அமைச்சர் அண்ணன் வேலு அவர்கள். இந்த ஆண்டு புது அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்கு தனது பிறந்தநாளை, மக்கள் கொண்டாட வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அவரது சொந்தக் கட்சிக்காரர்கள் கூட, அவரது பிறந்த நாளை மறந்து போய் விடுவதால், அவர்களுக்கு அதனை நினைவுபடுத்த, விதவிதமான ராஜதந்திரங்களைப் பயன்படுத்துவார். அதில் ஒன்றுதான் இது. 


நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள் கொண்டு வந்த உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால், 14 கோடி வீடுகளில் இருந்து, சுமார் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் இன்று சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. 


மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் பாதிக்கப்படும்போது, அதன் விளைவு அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கும். ஆனால், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு, அதற்கான தீர்வை ஏற்கனவே நடைமுறைப்படுத்திவிட்டார்கள்.


ஒருபுறம், முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று கூறிக் கொண்டிருக்கையில், அவரது அமைச்சரவையில் இருந்து கொண்டு, தனது பிறந்த நாள் விளம்பரத்துக்காக, பொதுமக்களிடையே வீண் பீதியை ஏற்படுத்துவதை அண்ணன் வேலு அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதுவுமே தெரியாவிட்டாலும், எல்லாம் தெரிந்ததைப் போல, கிரிக்கெட்டில் எத்தனை கோல் அடித்தார்கள் என்ற திமுகவினரின் வழக்கத்தை, இது போன்ற தருணங்களில் காட்டுவது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று கூறியுள்ளார் அண்ணாமலை.