கேள்வி கேட்டதற்காக வழக்கறிஞரை போட்டுத் தாக்குவீர்களா.. விசிகவுக்கு அண்ணாமலை கண்டனம்

Su.tha Arivalagan
Oct 08, 2025,11:21 AM IST

சென்னை:  தனது வாகனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் வாகனம் மோதியதைத் தட்டிக் கேட்டதற்காக ஒரு வழக்கறிஞரை நடு ரோட்டில் வைத்து விசிகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தாக்கிய செயல் கடுமையான கண்டனத்துக்குரியது என்று தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


சென்னை உயர்நீதிமன்றம் அருகே நேற்று ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது. விசிக தலைவர் தொல் திருமாவளவன் காரில் வந்தபோது ஒரு டூவீலர் காரருடன், விசிகவினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. டூவீலரில் வந்தவர் அதிமுக வழக்கறிஞர். அவரை விசிக வழக்கறிஞர்கள் தாக்குவதும், டூவீலரை சாலையில் தள்ளி விட்ட காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் குறுக்கிட்டு தடுக்க முயன்றும் கூட மோதல் பெரிதாக மாறிப் போனது.




இந்த சம்பவம் தொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் காணொலி மூலம் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். தனது கார் டூவீலரில் மோதவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை எக்ஸ் தளப் பதிவில் இதை விமர்சித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், பகலில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான அராஜகத்தில், விசிக குண்டர்கள் ஒரு வழக்கறிஞரை, தன்னை மோதிய கார் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டதற்காக தாக்கியதாகக் கூறப்படுகிறது, இதைவிட மோசமானது என்னவென்றால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்திவிட்டு திரும்பிய தொல். திருமாவளவனின் வாகனத் தொடரிலேயே ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம், அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.