பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

Su.tha Arivalagan
Jun 02, 2026,02:35 PM IST

சென்னை : தமிழக பாஜக.,வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக.,வில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் புதிய கட்சி துவங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.


அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, இவர் கர்நாடக கேடரில் புகழ்பெற்ற இளம் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். தனது நேர்மையான மற்றும் அதிரடியான காவல் துறை பணிக்காக "சிங்கம் அண்ணாமலை" என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.


2019-ல் தனது போலீஸ் பதவியை ராஜினாமா செய்த அவர், 2020-ல் பாஜகவில் இணைந்தார். மிகக் குறுகிய காலத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்தார். அவரது ஆக்ரோஷமான பேச்சு, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் 'என் மண் என் மக்கள்' போன்ற பாதயாத்திரைகள் மூலம் தமிழக மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். தமிழகத்தில் பாஜகவை ஒரு வலிமையான மாற்று சக்தியாக மாற்றுவதில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.




2025ம் ஆண்டு அதிமுக தலைமைக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தமிழக பாஜக., தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார். அதற்கு பிறகு அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புக்கள் ஏதும் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை, புதிய கட்சி துவங்க போவதாக பல மாதங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. 


இந்நிலையில் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன் டில்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நிபினை சந்தித்து பேசினார். அவரிடம் கடுமையான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய புகார் மனுவை அளித்ததாக சொல்லப்படுகிறது.


அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியில் டில்லி பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று பாஜக.,வில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நிதின் நிபினிடம் அண்ணாமலை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் புதிய கட்சி துவங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தனக்கு செல்வாக்கு உள்ள கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


அண்ணாமலை இனி மேல் தான் கட்சி துவங்க உள்ளதால், வரும் இடைத்தேர்தலில் அவர் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், அவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகும் பட்சத்தில் விரைவில் அவர் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.