விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
Jan 14, 2026,05:51 PM IST
டெல்லி: தவெக தலைவர் விஜய்யை நாங்கள் சாதாரணமாக எடை போடவில்லை. விஜய்க்கு என தனி கூட்டம் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினார். இந்த விழாவில் சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் பிரதமர் மோடி பசுவிற்கும் அதன் கன்றிற்கும் வேட்டி மற்றும் மாலை அறிவித்து உணவு வழங்கினார். பிரதமருடன் தமிழகத்தை சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், விஜய்யை நான் சாதாரணமாக எடைபோடவில்லை. அவர் ஒரு சினிமா நட்சத்திரம். தவெகவில் செங்கோட்டையன் போன்றோர் இணைந்துள்ளனர். கிளைகளை உருவாக்கிவருகின்றனர். அவர்கள் தொண்டர்கள் களத்தில் இருப்பதை நானும் பார்க்கிறேன். திமுகவை எதிர்க்கும் விஜய் எங்கு சென்று சேரவேண்டும் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.