அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்.. டிஸ்மிஸ் ஆனதும் திமுகவில் இணைந்தார்
Jul 21, 2025,11:46 AM IST
சென்னை: முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவில் இணைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வந்த மூத்த சிறுபான்மை வகுப்பு தலைவர் அன்வர் ராஜா. எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தவர். அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். நாடாளுமன்ற எம்.பியாக பணியாற்றியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது சிஏஏ சட்டம் தொடர்பாக அதிமுக தரப்பில் அன்வர் ராஜா கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார். இருப்பினும் அதை மீறி அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது. அதன் பின்னர் அன்வர் ராஜா சமரசம் செய்யப்பட்டு கட்சியில் நீடித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது குறித்து அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
அவர் திமுகவில் சேரப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அன்வர் ராஜா மறுத்திருந்தார். அவரை எடப்பாடி பழனிச்சாமி நேரில் அழைத்தும் பேசியிருந்தார். ஆனால் அன்வர் ராஜா தனது முடிவில் திட்டவட்டமாக இருப்பதாகவும், இன்று அவர் திமுகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்கி அதிமுக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார் அன்வர் ராஜா.
கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ஒரு இடத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் என்று சொல்லவில்லை. என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கும், என்டிஏ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், பாஜகவும் அதில் இடம் பெறும் என்றுதான் சொல்லி வருகிறார்.
நேற்று கேட்டபோது எடப்பாடி சொல்கிறார். ஆட்சியைப் பங்கு கொடுக்கும் அளவுக்கு ஏமாளி அல்ல என்று நேற்றுதான் சொல்கிறார். இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக ஒரு நெகட்டிவ் போர்ஸ். மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவேதான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் கேட்பதற்குத் தயாராக இல்லை.
எனவேதான் வேறு வழியில்லாமல் அடுத்த என்னுடைய ஆப்ஷன், திமுகதான். நம்முடைய அண்ணன் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) அடுத்த சா்யஸாக இருக்கிறார். எனவேதான் தளபதி தலைமையில் திமுகவில் இணைந்தேன் என்று கூறினார்.
அதிமுகவுக்கும், அன்வர் ராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இது முதல் முறையல்ல. 2021ல் இபிஎஸ் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விமர்சனம் செய்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளில் இருந்து அவர்கள் விலகிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். பிறகு 2023ல் அவர் மீண்டும் கட்சியில் சேர்ந்தார்.