Appam and Thengai Paal: சுவையான பாரம்பரிய காலை உணவு.. சுவையும் சத்தும் செம செம!
- தெ.நாராயண லெட்சுமி, B.E
தமிழர் சமையலில் சிறப்பு இடம் பெற்றுள்ள உணவுகளில் ஒன்றாக ஆப்பம் மற்றும் தேங்காய் பால் கருதப்படுகின்றன. மென்மையான ஆப்பமும் இனிமை கலந்த தேங்காய் பாலும் சேர்ந்து சாப்பிடும் போது சுவையிலும் சத்திலும் சிறந்த அனுபவத்தை அளிக்கின்றன.
அரிசி மாவில் தயாரிக்கப்படும் ஆப்பம் வயிற்றுக்கு லேசானது. அதனால் இது எளிதில் ஜீரணமாகும் உணவாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற உணவாக இது திகழ்கிறது. காலை நேரத்தில் ஆப்பம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைத்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
தேங்காய் பால் உடலுக்கு நல்ல கொழுப்பு சத்தையும் பல்வேறு கனிமச்சத்துகளையும் வழங்குகிறது. இது உடலை குளிர்வித்து ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக வெப்பமான நாட்களில் தேங்காய் பால் உடலுக்கு சீரான சக்தியை அளிக்கிறது.
சுவையும் சத்தும் இணைந்த ஆப்பம் – தேங்காய் பால் பாரம்பரிய உணவாக மட்டுமல்லாமல், குடும்பம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும் சிறந்த காலை உணவாகும். இவ்வாறான பாரம்பரிய உணவுகளை நமது அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வது நம் உடல்நலத்திற்கும் பாரம்பரியத்திற்கும் நல்லது.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 2 கப்
உளுந்து – 2 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ½ கப்
உப்பு – தேவைக்கு
தேங்காய் பால் தயாரிக்க:
தேங்காய் துருவல் – 1 கப்
வெந்நீர் – 1 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் – தேவைக்கு
செய்முறை:
பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 3–4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தேங்காய் துருவலுடன் சேர்த்து மென்மையாக அரைத்து மாவாக செய்து உப்பு சேர்க்கவும். இதை 6–8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
பின்னர் ஆப்பம் கல்லை சூடாக்கி சிறிது மாவை ஊற்றி கல்லை சுழற்றி ஓரங்களில் மெல்லியதாக பரப்பி மூடி வைத்து வேகவிடவும். மென்மையான ஆப்பம் தயார்.
தேங்காய் துருவலுடன் வெந்நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்து அதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கலக்கவும்.
சூடான ஆப்பத்துடன் இனிப்பு தேங்காய் பாலை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)