அரவணைப்பு

Su.tha Arivalagan
Feb 16, 2026,02:58 PM IST

- ஆனந்தி.ச


கிரீச்சிட்ட கதவை திறந்து வெளியே எட்டி பார்த்து மீண்டும் கதவை அடைத்த சூரஜை பார்த்து நமுட்டு சிரிப்புடன் “என்ன யாராவது வராங்களான்னு பாத்துட்டீங்களா? என்றாள் ரம்யா.


“ இல்ல இல்ல யாரும் வராங்களான்னு பார்க்கல சும்மா கதவை சரியா மூடிட்டேனான்னு பார்த்தேன் “


 “காய் கடைக்கு அனுப்பினா என்ன இப்படி காய்கறிகளை முத்தலும் சொத்தலுமா வாங்கியிருக்கீங்க ? “ தனது வசைப்பாட்டை தக்க தாளத்துடன் தொடங்கினாள் ரம்யா.


ரம்யா கத்தபோகிறாள் எனத்தெரிந்துதான் வாசலில் கோவிலுக்கு சென்ற அம்மா வந்துகொண்டிருக்கிறார்களா எனப்பார்த்தான் சூரஜ்.


“கல்யாணம் ஆகி 15 வருடமாச்சு ஒரு நாள் ஆவது நீங்க நல்லதா காய்கறி வாங்கிட்டு வந்திருக்கீங்களா? “இல்ல டிரை தான் பண்ணியிருக்கீங்களா? 




“நீயும் கல்யாணம் ஆன இந்த பதினைந்து வருடத்துல நான் வாங்கி வந்த பொருட்களை குறை சொல்லாமல் இருந்திருக்கியா? பதிலுக்கு பாய்ந்தான் சூரஜ்.


“நீங்க நல்லா வாங்கினா நான் ஏன் உங்கள குறை சொல்லப்போறேன்? “


“நான் ஒன்னு சொன்னா நீங்க ஒன்னு செய்வீங்க . கரெக்டா ஆப்போசிட்டாதான் செய்வீங்க “


என்னதான் இருந்தாலும் அந்த ஆம்பள குணம் அப்பப்ப எட்டி பார்க்கும். சூரஜ் மிக நல்ல குணம் படைத்தவன் . ரம்யாவை தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்குபவன் தான் என்றாலும் அந்த ஆண்வர்க்கத்திற்குரிய அந்த திமிர் எட்டிபார்த்துகொண்டேதான் இருக்கும்.


ரம்யா சொன்னது சரியாக இருந்தாலும் சட்டென்று ஒத்துகொள்ளவே மாட்டான். 


 “அது அப்படித்தான். உனக்கென்னத்தெரியும்? . நான் சொன்னத நீ செய்” என்ற அதிகார தொணி அவனுள் அப்பபோ எட்டிப்பார்க்கும்.


கல்யாணம் ஆன பொழுதில் புது இடம். புது மனிதர்கள்  அவர்களுக்கு முன்னாலேயே சூரஜின் அதிகார குரல் ஓங்கி ஒலித்து ரம்யாவை மட்டம்தட்டும்.ரம்யாவிற்கு அழுகை பொங்கிக்கொண்டு வரும் . ஆனால் அழக்கூட பயம் . 

இரவு பல நேரங்களில் தலையணை புதைதலில் அழுககைகள் புதைந்து போய்விடும்.


ஆனால் அன்றே அவளை சமாதானம் படுத்தும் நோக்கில் ஏதாவது புதிதாக பரிசளித்து விடுவான். ஆரம்பத்தில் மிக கஷ்டமாக இருந்த ரம்யாவிற்கு அதுவே பழகிபோனது . பழகிபோனது என்பதைவிட பழகிக்கொண்டாள்.


சூரஜை நன்கு புரிந்து வைத்திருந்தபடியால் வாக்குவாதம் செய்வதை என்றோ நிறுத்தியதுமட்டுமல்லாமல் ,” நீங்க சொல்வதுதான் கரெக்ட் “,என்று ஜால்ரா போடவும் கற்றுகொண்டாள்.


யாரும் இல்லாத பொழுது சுரஜ் கத்தும்பொழுது கொஞ்சம் மேலோங்கி சத்தம் எழுப்பினால்  அவன் அடங்கிவிடுவானென்றும் நன்கு புரிந்து வைத்திருந்தாள். இப்படியாக காலங்கள் 15 வருடத்தை கடந்திருந்தது. 


இன்று கூட அவன் அம்மா இருந்திருந்தால் , அவனை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கமாட்டாள் . வாழ்க்கையை வாழ தெரிந்த அவள் மிக மிக புத்திசாலி மட்டுமல்ல அதிர்ஷ்டசாலியும் கூட. தான் என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தாள்.


அவள் எதிர்ப்பார்ப்பது நடக்கவேண்டுமெனில் அவள் சூரஜிடம் எதிர்மறையாக சொன்னாலே  போதும் ..அவள் எதிர்ப்பார்ப்பது நடந்துவிடும் .


வாழ்கை மிகவும் சுமூகமாக வேண்டுமெனில் , ஈகோவை ஒழிக்கவேண்டும் .. அந்த மூன்றழுத்து ‘Ego’ பன்னிரண்டு  எழுத்தான “Relationship’ ஐ கொன்றுவிடும்.


அவள் மாமியார் சொல்வதைதான் சமைக்க வேண்டும் .. அதுவும் மாமியார் அதற்குண்டானவற்றை முதல்நாளே ஏற்பாடு செய்து வைத்திருப்பார். காலையில் சமயலறைக்குள் செல்லும் ரம்யாவிற்கு கோபம் கொப்பளித்து தலைக்கேறும்.


 “முதலில் அம்மாவிடம் சொல்லி நியாயம் கேட்க நினைத்தவளின் வாயை அம்மா முதல்நாளே ”இந்தா பார் ரம்யா உன் வீட்டு கதையை நீயே தான் பார்க்கனும்.” இங்க உனக்கப்புறம் கல்யாணத்துக்கு இரண்டு தங்கைகள் இருக்காங்க . அவங்க, உன்னைப் பார்த்துதானே கத்துப்பாங்க ?” என கூறி அடைத்தாள். 


அன்று அவள் அம்மா சரியாகதான் கூறியிருக்கிறாள் . அன்று அவளுக்கு அம்மா வீட்டில் சப்போர்ட் கிடத்திருந்தால் . தொட்டதுக்கெல்லாம் அம்மாவிடம் நியாயத்திற்கு போய் நின்று , இன்று டைவர்ஸ் வரை வந்திருக்கும். 


குடும்பம்னா அப்படிதான் இருக்கும் . வாழ்க்கை என்பது இதுதான் .. “நம்ம அம்மா சொன்னா செய்ய மாட்டோமா என்ன? என அவளுக்கு அவளே பக்குவப்படுத்திக்கொண்டாள். 


வீட்டுக்கு வீடு வாசற்படி , பிரச்சனையோ சண்டை சச்சரவோ இல்லாத வீடு தான் ஏது ? குடும்பந்தான் எது? இன்றும் அவர்களுக்கிடையே நல்ல புரிதல் ,காதல் ,ஊடல் எல்லாமும் உண்டு அதுவும் ஆரோக்கியமானதாக உண்டு.  மற்றவர்களை அரவணைத்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற வார்த்தை அகராதியிலேயே கிடையாது .


ரம்யாவின் அகராதியில் அரவணைப்பு மட்டுமே இருந்ததால்  தோல்வி என்பது இல்லை . வாசலில் கதவு  தட்டும் சத்தம் கேட்க மாமியார்தான் என்பதை தெரிந்தவள் , “இதோ வரேன் அத்தை“ எனச்சொல்லி கதவை திறக்க எழுந்ததில் தெரிந்தது அவளின் அரவணைப்பு.


(ஆனந்தி ச, பட்டாதாரி ஆசிரியர் ( ஆங்கிலம்), அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)