வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் கரை கடந்தது:மணிக்கு 150 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த சூறைக்காற்று

Su.tha Arivalagan
Oct 28, 2026,11:35 AM IST

புதுடெல்லி : வங்கக்கடலில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று ‘அர்னாப்’ என பெயரிடப்பட்டது. இப்புயல் நகரும் வேகம் மற்றும் திசை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது நிலப்பரப்பைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   


நர்சாபூர் - காக்கினாடா இடையே கரை கடந்தது:


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 'அர்னாப்' அதி தீவிர புயலானது ஆந்திர மாநிலம் நர்சாபூர் மற்றும் காக்கினாடா ஆகிய பகுதிகளுக்கு இடையே, ஏனாம் அருகே முழுமையாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த சமயத்தில், மிக பலத்த சூறைக்காற்று வீசியது. மணிக்கு 125 கிலோமீட்டர் முதல் 150 கிலோமீட்டர் வரையிலான மிக அதிவேகத்தில் காற்று சுழன்றடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கடலோரப் பகுதிகளில் பலத்த மழையும், அலைகளின் சீற்றமும் கடுமையாகக் காணப்பட்டது.   


தீவிர புயலாக வலுவிழந்தது:




நிலப்பரப்பிற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, 'அர்னாப்' அதி தீவிர புயல் தற்போது சற்று வலுவிழந்து 'தீவிர புயலாக' மாறியுள்ளது. நிலப்பகுதியில் மேலும் நகர்ந்து செல்லும் போது இது படிப்படியாக மேலும் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னெச்சரிக்கை மற்றும் பாதிப்புகள்:


புயல் கரையைக் கடக்கும் போது ஏற்பட்ட அதிவேக சூறைக்காற்று காரணமாக, கடலோரப் பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


மீனவர்களுக்கு எச்சரிக்கை:


புயல் முழுமையாகக் கரையை கடந்த போதிலும், கடலில் சீற்றம் தொடர்ந்து காணப்படும் என்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், புயல் நகர்ந்து செல்லும் பாதையில் உள்ள மாவட்டங்களில் கனமழை தொடரக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.