சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த மாஸான கோவில்.. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில்!
- ஸ்வர்ணலட்சுமி
நம் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் சங்கரன் கோவில் ஆகும். இக்கோவிலில் சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் இணைந்த சங்கரநாராயணராக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பதால் இத்திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோவில் தல வரலாற்றைப் பற்றியும், சிறப்புகளை பற்றியும் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
தல வரலாறு :
சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் எனும் அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா?திருமால் பெரியவரா? என்று வாக்குவாதம் அடிக்கடி எழும்பும்.தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர்.
இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பது அவர்களுக்கு தெரிவிக்க இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் கடும் தவமிருந்தாள். அம்பாளின் தவத்தின் பயனாக இருவரும் ஒன்றாக இணைந்து சக்கர நாராயணனாக காட்சி தந்தனர். பின்னர் அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன் சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடிவிட்டது.
நாகராஜாக்களும் அதன் உள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை எடுத்த போது உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டி விட்டார். அதனால் ரத்தம் வெளிப்பட்டது.அவர் அதிர்ந்து போனார். புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தை கண்டார். தகவல் பாண்டிய மன்னனுக்கு சென்றது, லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.
சங்கரன்கோவில் தல சிறப்பு :
இக்கோவிலில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி, அருள்மிகு சங்கரலிங்க சுவாமி ,அருள் தரும் கோமதி அம்மன் கோவில்கள் உள்ளே அமையப்பெற்றுள்ளன. இங்குள்ள தீர்த்தம் நாகசுனை ஆகும். இக்கோவிலின் தலவிருட்சம் புன்னை மரம் ஆகும்.
பாண்டிய நாட்டு பஞ்ச தலங்களில் இது பிரித்வி ஸ்தலம் அதாவது மண் தலம் ஆகும்.
நோய்களை தீர்க்கும் புற்றுமண் பிரசாதம் :
இக்கோவிலில் உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்றுமண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக் கொள்வார்கள். இத்தலத்தின் புற்றின் மண் நோய்களை தீர்க்கும் மருந்தாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் இவ் ஊரிலேயே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறிய செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமையப்பெற்றுள்ளது.
குறிப்பாக மார்ச் மாதம் 21, 22,23 ஆகிய நாட்களிலும் செப்டம்பர் மாதம் 21,22,23 ஆகிய நாட்களிலும் சூரியன் உதிக்கும் போது அதன் ஒளி சங்கரலிங்கர் மீது விழுவதை இன்னும் காணலாம்.சூரிய பகவான் சங்கரலிங்கரை இந்த நாட்களில் வழிபட்டு வருகிறார் என்று தலபுராணம் கூறுகிறது.
கோவில் நடைதிறப்பு :
காலை ஐந்து மணி முதல் 12 :30 மணி வரை, மாலை 4 :00மணி முதல் இரவு 9 :00 மணி வரை திறந்திருக்கும்.
இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் :
ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறும். சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஒன்பதாம் நாள் அன்று அம்பாள் திருத்தேரோட்டமும் கோலாகலமாக நடைபெறுகிறது.
மேலும் புரட்டாசி நவராத்திரி திருவிழா 9 நாட்கள், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள், மார்கழி திருவெம்பாவை திருவிழா 10 நாட்கள், சித்திரை பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள், ஐப்பசி சஷ்டி ஏழு நாட்கள். தை மாதம் தெப்பத் திருவிழா மூன்று நாட்கள், தை மாதாந்திர வெள்ளிக்கிழமையும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண் தலமான சங்கரன்கோவிலை வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசிப்பது சிறப்பு. பக்தர்கள் உங்களுக்கு இயன்ற பொழுதும்,வாய்ப்பு கிடைக்கும் பொழுதும் இக்கோவிலைச் சென்று தரிசித்து வாருங்கள்.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.