சாம்பல் புதன்.. கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வு.. தெரிந்து கொள்வோமா.?

Su.tha Arivalagan
Feb 18, 2026,10:14 AM IST

- அ. வென்சி ராஜ்


ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் முக்கியமான நிகழ்வுகளில் சாம்பல் புதனும் ஒன்று. உலகம் ஓடுகிற போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதன், சற்று நிதானித்து, சிந்தித்து, ஆன்மீக வழியில்  தியானிக்க கிறிஸ்தவர்களுக்காக  கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு அருமையான காலமே  தவக்காலம். அந்த தவக்காலத்தின்  தொடக்க நாளையே அவர்கள் சாம்பல் புதனாக கொண்டாடுகிறார்கள். 


விவிலியத்தின் அடிப்படையிலும்  விசுவாசத்தின் படியும் மனிதன் மண்ணிலிருந்து தோன்றினான். மீண்டும் அவன் மண்ணுக்கே திரும்புவான் என்பதை உணர்த்தும் விதமாக இந்த சாம்பல் புதன்  அனுசரிக்கப்படுகிறது.  


40 நாட்கள் என்பதும் விவிலியதோடு தொடர்புடையது  தான்.  அன்று மோசே 40 ஆண்டுகள் பாலை நிலத்தில் இறை அருளால்  இஸ்ரேல் மக்களை கானான்  நாட்டிற்கு வழிநடத்திச் சென்றார். நீதிமான்களையும் நேர்மையாளர்களையும் நோவா பெட்டகத்தில்  40 நாட்கள் பெருமழையில் இருந்து இறைவன் தப்புவித்தார். புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து தன்னுடைய பொது வாழ்க்கைக்கு செல்லும் முன் 40 நாட்கள்  நோன்பிருந்து சாத்தானின் சோதனைகளை முறியடித்தார். இவ்வாறு 40 என்பது விவிலியத்தின் படி கிறிஸ்தவ வாழ்வில் மிக முக்கியமான ஒரு எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது.  அதன் அடையாளமாகவே தவக்காலமானது 40 நாட்கள் அனுசரிக்கப்படுகின்றது. 




விவிலிய வார்த்தைகளின் படி வாழ வேண்டும் என்பதே இறைமைந்தன் இயேசுவின் அன்பு கட்டளை. அந்த வார்த்தைகளை வாசித்து விட்டு வாழ்வாக்க மறக்கும் பொழுது பாவ வழியில் பயணிக்கின்றோம்.  பாவம் என்றவுடன் மிகப்பெரிய தவறுகளை எல்லாம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.


போகிற போக்கில் தன் சக மனிதர்களை வார்த்தைகளாலோ செயல்களாலோ காயப்படுத்தி விட்டு செல்வதும், சக மனிதனை அன்பு செய்ய மறக்கும் பொழுதும் மறுக்கும் பொழுதும் ஏழை எளியோரின் தேவைகளில் உதவி செய்ய மறந்து நிராகரிக்கும் பொழுதும் பிறருடைய மனவேதனைகளுக்கு நாம் ஒரு காரண கர்த்தாவாக மாறும்பொழுது பாவ வழியில் தான் சென்று கொண்டிருக்கிறோம் இதை உணர்வதற்குத் தான் கிறிஸ்துவம் தவக்காலம் என்ற ஒரு அற்புதமான காலத்தை  நமக்கு கொடுத்திருக்கிறது.  பாவிகளை மீட்கவே  இறை மைந்தன் இயேசு  இவ்வுலகம் வந்தார். பாவிகளை மன்னித்து மீட்டெடுப்பதில் இறைவன் வற்றாத கருணைக்கடலாக உள்ளார்.  அதை உணர்வதற்கு இந்த தவக்காலம் அற்புதமான காலமாக அமைந்திருக்கிறது. 


பழைய ஏற்பாட்டில் தவம் என்பது சாம்பலை உடலில் பூசிக்கொண்டு, சாக்கு உடுத்தி இறைவனிடம் மனம் உருகி ஜெபித்ததாக நாம் படிக்கின்றோம்  அதை நினைவு கூறும் விதமாக  சென்ற ஆண்டு குருத்து ஞாயிறன்று கொடுக்கப்பட்ட ஓலைகள் அனைத்தும் எரிக்கப்பட்டு அதிலிருந்து வரும் கரிய நிற சாம்பலானது ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் தலைகளிலும் சிலுவை அடையாளமாக வரையப்படுகிறது. இது அவர்கள் தவத்தை மேற்கொள்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்துவதாக அமைகின்றது.


இந்த 40 நாட்களும்  கிறிஸ்தவர்கள்  மூன்று உறவுகளில் தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.   


* இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையேயான உறவு. 


* பிற மனிதர்களுக்கும் அவர்களுக்குமான உறவு. 


* அவர்களுக்கு அவர்களுடனேயான உறவு. 


இத்தகைய மூன்று நிலையில் தங்களுடைய உறவுகளை புதுப்பிக்கும் ஒரு அற்புதமான காலமே இந்த தவக்காலம் . அவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்தல்,  மன்னித்தல்,பிறருக்காக ஜெபித்தல், தங்களால் இயன்ற உதவிகளை தேவைப்படுபவருக்கு செய்தல், தங்களிடம் உள்ள ஏதாவது தவறான பழக்கங்களை விட்டு விடுதல்,அதிக நேரம் கடவுளுடன் உரையாடுதல்,இறை வார்த்தைகளை அதிக நேரம் படித்தல், தங்கள் ஆன்மாவை சரிபடுத்தி இறைவழியில் நடத்தல் என பல தவ முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.  அதிலும் இந்த 40 நாட்கள் என்பது ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து  கணக்கிடப்படுகிறது. கிறிஸ்துவத்தில் ஞாயிறு என்பது கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருநாளாக அனுசரிக்கப்படுகின்றது. எனவே ஞாயிற்றுக்கிழமைகள் இந்த தவக்காலத்தின்  40 நாட்கள் எண்ணிக்கையில் வராது என்பது குறிப்பிடத்தக்கது.


மானுடம் தன்னை சரி செய்து கொள்ள இறை மைந்தனின் அருள் வேண்டும் ஒரு அற்புதமான காலமே இந்த தவக்காலம்.  அதற்கான தொடக்கமே இந்த சாம்பல் புதன்.  கிருத்துவம் பேசும் சாம்பல் புதனின் பொருள் பொதிந்த அருள் வாழ்வினை தெரிந்து கொள்வோம்.


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)