சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
மும்பை: என்ன கேள்வி கேட்டாலும் சாட் ஜிபிடி பதில் சொல்லும் நிலையில், சரியான கேள்வியைக் கேட்கிறோமா என்பதில் தான் நமக்கான பயன் இருக்கிறது என்று ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதன் தலைவர் முகேஷ் அம்பானி. பெட்ரோல் கெமிக்கல், தொலைத்தொடர்பு சேவை என ரிலையன்ஸ் குடுழுமம் கால் பதிக்காத துறையே கிடையாது. அப்படி அவர்கள் எங்கே இறங்கினாலும் அதில் வெற்றி தான். ஒரு தொழிலில் வளர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் கூறும் கருத்துக்கள் பொதுமக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வளர்ந்து வரக்கூடிய ஏஐ தொழில்புட்பம் குறித்து அவர் பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசுகையில், உலக அளவில் சக்தி வாய்ந்த பொருளாதாரமாக இருக்கக்கூடிய நாடுகள் எல்லாமே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வலுவான அடிப்படையை கொண்டு இருக்கின்றன. தற்போது நாம் அமெரிக்கவை பெரிய நாடாக பார்க்கிறோம். அதற்கு முக்கிய காரணம் அங்கு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பமும் தான் காரணம். இந்தியாவைப் பொருத்த வரை நாம் இப்பொழுது சிறப்பாக செயல்பட வேண்டிய கலமாக இருக்கிறது.
மாணவர்கள் எப்பொழுதும் பெரிய அளவில் கனவு காண வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வத்துடன் அணுக வேண்டும். அந்த ஆர்வம் எந்த வயதிலும் உங்களை விட்டு போகக் கூடாது. இது வாழ்க்கையில் வெற்றி பெற மிக முக்கியமானதாகும். தற்போது சாட் ஜிபிடி வந்துவிட்டது நீங்கள் எது கேட்டாலும் அது பதில் அளிக்கும். ஆனால், நீங்கள் சரியான கேள்வியை கேட்கிறீர்களா என்பதில் தான் விஷயம் இருக்கிறது. அனைவரும் அணுகும் வகையில் ஏஐ தொழில்நுட்பம் மாறிவிட்டது. ஆனால் சிறந்த கேள்வியை கேட்பவர்களால் மட்டுமே இதில் வெற்றி பெற்று சிறந்த தலைவராக உருவாக முடியும் என்று தெரிவித்துள்ளார்.