ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!

Su.tha Arivalagan
Jun 19, 2026,01:30 PM IST

மெல்போர்ன்: வெளிநாட்டில் உயர்கல்வி கற்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கான மாணவர் விசா (Student Visa) கட்டணம் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக சுமார் 46,000 ரூபாயாக (710 AUD) இருந்த மாணவர் விசா விண்ணப்பக் கட்டணம், தற்போது 1.05 லட்சம் ரூபாயாக (1,600 AUD) இருமடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், கனடா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியா உலகிலேயே மிக அதிக விசா கட்டணம் கொண்ட நாடாக மாறியுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


புதிய விசா கெடுபிடிகள்:




கட்டண உயர்வு மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளையும் அந்நாட்டு அரசு கடுமையாக்கியுள்ளது.


உள்நாட்டிலிருந்தே விண்ணப்பிக்க தடை: ஆஸ்திரேலியாவிற்கு தற்காலிக பட்டதாரி விசா (Temporary Graduate Visa) மற்றும் விசிட்டர் விசா (Visitor Visa) மூலம் சுற்றுலா அல்லது இதர காரணங்களுக்காக வந்தவர்கள், அங்கு இருந்தபடியே தங்களது விசாவை மாணவர் விசாவாக மாற்ற (Onshore Application) இனி விண்ணப்பிக்க முடியாது என புதிய கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாணவர் விசா பெற விரும்பினால், தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பி அங்கிருந்து தான் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.


குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆஸ்திரேலியாவில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை, வீட்டு வாடகைத் பற்றாக்குறை மற்றும் குடியேற்றப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மாணவர்கள் மத்தியில் அதிருப்தி:

ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் பயிலத் திட்டமிட்டிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பலத்த பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்கு கல்வி பயின்று முடித்துவிட்டு வேலை தேடும் தற்காலிக பட்டதாரிகளுக்கும் இந்த புதிய விதிகள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதால், மாணவர் அமைப்புகள் மற்றும் கல்வி ஆலோசகர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கடுமையான விசா விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வு காரணமாக, சர்வதேச மாணவர்கள் தங்களின் உயர் கல்விக்கான மாற்று நாடுகளாக கனடா அல்லது ஐரோப்பிய நாடுகளைத் தேர்வு செய்யத் தொடங்குவார்கள் என்று கல்வித்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.