ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

Su.tha Arivalagan
Sep 21, 2026,03:02 PM IST

- ஆ.வ. உமாதேவி


திருவள்ளூர்: பள்ளி மேலாண்மை குழு, பள்ளியின் வளர்ச்சி, மாணவர் நலன் பள்ளி மற்றும் சமூகத்துடனான தொடர்பு ஆகியவற்றிற்காக ஏற்படுத்தப்பட்டது. தற்போது நடைபெற்றது, மூன்றாவது பள்ளி மேலாண்மை குழு ஆகும். 


கடந்த 12-09-2026 அன்று, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 50% தொடக்கப் பள்ளிகளுக்கு மறு கட்டமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. 


19-09-2026 இரண்டாம் கட்டமாக 50% தொடக்கப்பள்ளிகளுக்கு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நடைபெற்றது. நமது பள்ளிக்கு மறு கட்டமைப்பிற்கான தேர்தல், தமிழ்த்தாய் வாழ்த்து உடன் தொடங்கியது. 


நமது பெற்றோர்கள், பள்ளியின் மீதும் மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். பள்ளியின் வளர்ச்சியில் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட கூடியவர்கள். பள்ளி மேலாண்மை குழுவாக செயல்படாமல், ஒரு குடும்பமாக செயல்படுபவர்கள் என்று சொன்னால் மிகை ஆகாது. 




பெற்றோர் உறுப்பினர்கள், முன்னாள் மாணவ பெற்றோர் உறுப்பினர்கள், முன்னாள் மாணவர், மகளிர் சுய உதவிக் குழு பெற்றோர் உறுப்பினர், துணைத் தலைவர் அனைவரையும் எந்த வாக்கு எடுப்பும் இன்றி அனைவரும் ஒருமனதாக தெரிவு செய்தோம். 


இறுதியாக தலைவரை தேர்ந்தெடுக்கும் போதும் எந்தவித போட்டி இல்லாமல் திருமதி வாசுகி என்பவர் ஒரே வேட்பாளராக நின்றதால், அவரையே தெரிவு செய்ய வேண்டிய சூழல் நிலவியது.


என்னடா இது உப்பு சப்பில்லாமல் ஒரு காரசாரமில்லாமல் தேர்தல் முடிந்து விட்டதே என்று நினைத்த வேளையில், திருமதி மீனா எழுந்து நின்றார். இருவருமே நல்ல தோழிகள். எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்படுபவர்கள் என்பதால் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் பெற்றோர் உறுப்பினர்கள் இருந்தனர்.


இந்நிலையில் வாக்கெடுப்பு நடந்தது. இருவருக்கும் சமமாக எட்டு வாக்குகள் கிடைத்தன. 


தேர்தல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இருவரது பெயர்களும் எழுதப்பட்ட சீட்டுகளை குலுக்கி போட்டு, எனது வருங்கால மாணவனாகிய இன்றைய 9 மாத மழலை ஜெஷ்விக் கையால் சீட்டு எடுத்து எங்கள் பள்ளியின் தலைவரை தேர்ந்தெடுத்தோம். 


புதிதாக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி மீனாவுக்கும் அனைவரும் வாழ்த்து கூறினோம்.  கல்வியாளர் மற்றும் முன்னாள் மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருமே என்னிடம் முதல் வகுப்பில் இருந்து பயின்றவர்கள் அவர்களை குழந்தை பருவத்தில் எப்படி பார்த்தேனோ அதே அன்பும் மரியாதையும் பணிவும் சிறிதும் மாறாமல், பள்ளியின் பால் அக்கறையோடு இருப்பதால், அவர்களை தேர்ந்தெடுத்தோம். 




இந்த அத்தனை நிகழ்வுகளையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த நமது பள்ளியின் மறு கட்டமைப்பிற்கு கண்காணிப்பாளராக வந்த திருமதி போகவதி தலைமை ஆசிரியர் (மங்காபுரம்) அவர்கள் நமது பெற்றோரின் ஒற்றுமை மற்றும் பள்ளி வளர்ச்சியில் பங்கெடுக்கும் பாங்கு இவற்றை பாராட்டி பேசினார். வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை கண்டு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி ராதிகா (பெற்றோர்) தூய்மை பணியாளரையும் பாராட்டி பேசினார். மொத்தத்தில் பள்ளி மிகவும் சிறப்பாக உள்ளது என்று கூறியதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தோம். 


SMC உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பம் இட்டு,  தேநீர் அருந்தி மகிழ்ச்சியாக சென்றனர். கூட்டம் இனிதே முடிந்தது.


இந்த வாக்கெடுப்பு நிகழ்வின்போது அனைவரது உள்ளத்திலும் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஒரு குடும்ப நிகழ்வு போல சிறப்பாக அமைந்த இந்நிகழ்வு என்றும் எங்கள் உள்ளங்களில் பசுமையாக நிறைந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர்,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முருக்கம்பட்டு காலனி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.)