பெண்ணின் மகிழ்ச்சி.. மகளிர் தினத்தில் மட்டுமல்ல.. எல்லா நாட்களும் நீடிக்கட்டும்!
- ஆ.வ.உமாதேவி
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி மட்டும் மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்களை சொல்லியும் கொண்டாட்டங்கள் நடத்தியும் பின் ஆண்டு முழுவதும் அவளை நசுக்கி, பிழிந்து, துன்புறுத்தும் செயல்களில் இருந்து விடுபடுதலே ஒரு பெண்ணின் உண்மையான மகிழ்ச்சி தினம். அது மகளிர் தினத்தில் மட்டும் இல்லாமல், எல்லா நாட்களிலும் இருந்தால் நலமே!
சில கணவன்மார்கள், தன் மனைவி தன்னைவிட அதிகம் படித்திருந்தாலோ தன்னைவிட அதிகம் சம்பளம் வாங்கினாலோ ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக சந்தேக குணம் கொண்ட ஆண்கள் பெண்களை நிம்மதியாக வாழ விடுவதில்லை கவிஞர் ஒருவர் 30 நாளும் சந்தேகப் பேய் கொண்ட கணவன் முதல் தேதி மட்டும் சந்தேகப் பேய்க்கு விடுப்பு கொடுக்கிறார் என்று பாடியுள்ளார்.
"சேலை கட்டிய பெண்ணை நம்பாதே"
என்பது அவ்வையார் பாடியதாக கூறப்பட்டாலும், அது உண்மையாக அவ்வையார் பாடிய பாடல் அல்ல. அது விவேக சிந்தாமணி எனப்படும் நூலில் உள்ள ஒரு பழமொழியாகும். இந்த பழமொழியின் உண்மை வடிவம் யாதெனில் "சேல் அகட்டிய மாதரை நம்பாதே" என்பதாகும் "சேல்" என்பது ஒருவகை மீன் ஆகும். "அகட்டிய" என்றால் விரித்து என்று பொருளாகும். அதாவது திருமணமான பெண்கள் பிற ஆடவரை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள்; ஒருவேளை மீனைப் போன்ற கண்களை உடையவள் கண்களை விரித்து பிற ஆடவரை தவறான நோக்கில் பார்க்கும் பெண்ணாய் இருந்தால், நம்பாதே என்பதே இப் பழமொழியின் உண்மை பொருள்.
காலப்போக்கில் இப் பழமொழி சேல் என்பது சேலை என மாறி, அகட்டிய என்பது கட்டிய என மாறி, சேலை கட்டிய பெண்ணை நம்பாதே என்று மாறி ஒரு பெண்ணைப் பற்றிய தவறான கருத்தை ஏற்படுத்தும் விதமாக மருவி விட்டது.
மகளிர் தின நாளில் இப்ப பழமொழியின் உண்மை பொருள் அறிந்து பெண்ணை மதித்து, அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவளது வாழ்க்கையை அவள் வாழ வழி கொடுப்போம்.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)