காலமிது காலமிது விழித்துக் கொள்ளும் காலம் இது!

Su.tha Arivalagan
Oct 03, 2026,05:19 PM IST

-ஆ.வ. உமாதேவி


ஈக்களுக்கு சாக்கடையே பூக்கடை! 

மலம் இருக்கும் இடமோ மலர் தோட்டம்! 


கொசுக்களுக்கு தேங்கிய நீர் கொண்டாட்டம். 

புதர்கள் நிறைந்த இடம் பூந்தோட்டம்! 


இவைகள், எங்கும் திரியும் 

எதிலும் அமரும் 

இவைகள், சிறகு முளைத்த நோய்கள். 


இவைகளை 

தடுத்தாள்வதில்  நாம் ராஜாக்கள். 

இல்லையென்றால், தூசும்  மாசும் காற்றில் இருக்கும்

நோயும் நொடியும் வீட்டில் இருக்கும். 


காசு வாங்காமல் காலை மாலை இருவேளை

ஊசி போடும் கொசுக்களை கொல்லாமல் விட்டோம் 

ஆனால், அரசு பொது மருத்துவமனையில் அங்கமாய் சேர வேண்டி வரும். 




அதிக அளவு ஆக்சிஜனை தரும் அரச மரங்கள் நட மறந்தோம். 

குளிர்ச்சியை குளிர்சாதன பெட்டி போல தரும் புங்கையை நட மறந்தோம். 

மருத்துவ குணம் உள்ள உறுப்புகளை கொண்ட, வேம்புதனை நட மறந்தோம். 

"நோய்க்கு இடம் கொடேல்" என்பதை முற்றிலும் மறந்தோம். 


தண்ணீரை, என் தாத்தா 

ஆற்றில் பார்த்தார். 


என் அப்பா கிணற்றில் பார்த்தார். 


நான் குழாயில் பார்த்தேன். 


என் பிள்ளை பாட்டிலில் பார்க்கிறது. 


என் பேரப்பிள்ளை எங்கு பார்க்குமோ? 

என்னும் அச்சத்தில் உதிர்த்த என் வார்த்தைகளை, 

உதட்டளவு வார்த்தை என எண்ணாமல், 

உள்ளத்தில் நிறுத்தியே 

உற்சாகமாய் 

வாழ்வோமே! 


பசுமை நிறைந்திருந்தால்,

உள்ளம் ஊஞ்சலாடும். 


பசுமை மறைந்தால், 

உயிர் ஊசலாடும் 

என்பதை கருத்தில் கொள்வோம்.


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர்,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முருக்கம்பட்டு காலனி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்)