அவளின் (ல்) அவன்!
- ரதி தேவி
மூச்சிறைக்க வந்து சீட்டில் அமர்ந்து, அப்பாடா என நெஞ்சில் கை வைத்து மூச்சை இழுத்து விட்டுட்டு நிமிர்ந்து பார்த்தாள், எதிரே அவன்.
அவன் விழிகள் அவளைக் கவனிப்பதைக் கண்டாள், சில நொடிகள் விழிகளிடையே பரிமாற்றம்.
சட்டென்று அவள் தன் தலையை ஜன்னல் வழியாக பக்கம் திருப்பி வெளியே நோட்டமிட்டாள்.
தொடர்வண்டி கிளம்பும் ஒலி கேட்டுத்தான் அவள் ஓடோடி வந்து அவளது இருக்கைத் தேடி அமர்ந்தாள். அப்பொழுதுதான் அவனைப் பார்த்தாள்.
தலை மட்டும் ஜன்னல் பக்கம் விழிகள் என்னவோ, அவனைப் பார்த்து.
நெஞ்சு ஏன் இப்படி படபடக்குது என மனதிற்குள் நினைத்தாள். அந்த இருக்கைகளில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இல்லை என்பதே அதற்கு காரணம்.
அவள் ஒர விழிகளால் பார்க்க அவனோ புத்தகத்தில் தன் விழிகளைப் புதைத்திருந்தான்.
நொடிகள், நிமிடங்கள் கடந்தன. ஆனாலும், அவளின் படபடப்பு குறைந்தபாடில்லை.
ஏன் இந்தப் படபடப்பு என்று உள்ளுக்குள்ளே கேட்டுக் கொண்டாள். பிறகு தன்னைச் சமாளித்துக் கொண்டு தன் ஹேண்ட் பேக்கிற்குள் கையிட்டு எதையோ தேடுவது போல் தேடினாள். தேடிக்கொண்டே தலை நிமிராமல் விழிகள் மட்டும் அவனை நோக்கின.
அவனும் புத்தகத்தின் மீதிருந்த விழிகளை அவள் மேல் செலுத்தினான்.
இருவரின் விழிகளும் இமைக்காமல் சந்தித்தன. உதடுகள் அசையவில்லை. ஆனால், விழிகள் மட்டும் பேசிக்கொண்டன.
விழிகளின் பார்வையிலிருந்து விலக சில நொடிகள் பிடித்தன. அவள், தன்னைச் சுதாரித்துக் கொண்டு, பைக்குள் இருந்த போனை வெளியே எடுத்தாள். அவனும் புத்தகத்தை மூடிவிட்டு ஜன்னல் வழியே தன் பார்வையைப் பதித்தான்.
இருவரின் இதயத்திலும் ஏதோ இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது போன்று உணர்ந்தனர்.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகள் ஏற ஆரம்பித்தனர். அவளுடைய கம்பார்ட்மெண்டிலும் ஏற ஆரம்பித்தனர்.
இப்போதுதான் அவளுக்கு மனசு கொஞ்சம் இளைப்பாறத் தொடங்கியது. ஆனாலும் விழிகளின் ஓட்டம் மட்டும் குறையவில்லை.
அவனிடம் கேட்கலாமா? வேண்டாமா? "உங்கப் பெயர் என்ன? எங்கே போறீங்க?" என்று மனம் நினைத்தது. ஆனால் வார்த்தைகள் என்னவோ தொண்டையை அடைத்தது.
அவர் அருகில் வந்து அமர்ந்த வயதானவர் ஒருவர் அவளிடம் பேச்சுக்கொடுக்க, அவளோ அதற்கு செவிசாய்க்க விரும்பாமல் ஏதோ மேம்போக்காக தலையை மட்டும் ஆட்டினாள்.
அந்த வயதான அம்மா உடனே அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்,
"தம்பி! எங்கப்பா போறீங்க?"
இதைக் கேட்டவுடன் அவளும் எங்கே என்று தெரிந்து கொள்வதில் கொள்ளை விருப்பம், இதயம் படபடவென அடித்தது.
அவன், "நான் கன்னியாகுமரி வரைப் போறேன் மா," என்றவுடன் அவளும் அதைக் கவனிக்கத் தவறவில்லை. அவளின் மனதில் கொஞ்சம் நிம்மதி, நான் இறங்கும் நிறுத்தம் வரை இருப்பான் என்று.
(தொடரும்)