அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
Nov 25, 2025,12:37 PM IST
- அ.சீ.லாவண்யா
அயோத்தி: பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்கு வருகை தந்துள்ளார். அவரின் வருகையை முன்னிட்டு ராமர் கோவில் நகரம் முழுவதும் கொண்டாட்ட சூழ்நிலை நிலவுகிறது. ராமர் கோவிலில் பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் இணைந்து பூஜை செய்து வழிபட்டனர்.
அயோத்தியாவின் முக்கிய சாலைகள், ராமர் கோவில் சுற்றுப்புறம், சங்கமப் பகுதிகள் உள்ளிட்டவை அனைத்தும் மின் விளக்குகள், மலர் அலங்காரம், பாரம்பரிய தோரணங்கள் ஆகியவற்றால் மிக பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. முழு நகரமும் வண்ணமயமான ஒளியால் மின்னி, திருவிழா சூழலை உருவாக்கியுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பக்தர்கள், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் அயோத்தி முழுவதும் திரண்டுள்ளனர். பிரதமரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் மக்கள் அதிரடியான உற்சாகத்தில் உள்ளனர். இன்று பிற்பகல் 12 மணியளவில் கோவில் கோபுரத்தின் கலாசத்தின் மேல் கொடியேற்றும் நிகழ்வானது நடைபெற்றது. இது கோவிலின் காட்டுமான பணிகள் நிறைவுபெற்றதாக அர்த்தம் கொள்ளப்படும்.
கோவிலின் 161 அடி உயர சிகரத்தின் மீது ஏற்றப்பட்ட இந்த கொடி, ராமரின் தெய்வீக ஆட்சியின் சின்னமாகவும், தர்மம், ஒற்றுமை, ஆன்மிகம் ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த கொடியின் வடிவமைப்பில் 'ஓம்', 'சூரிய சின்னம்' உள்ளிட்ட பாரம்பரிய குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.
பிரதமரின் வருகையால் அயோத்தி நகரம் முழுவதும் ஆன்மீகத்தோடும் உற்சாகத்தோடும் விழாக்கோலம் பூண்டுக் காணப்பட்டது.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பில் பங்கேற்று எழுதி வருகிறார்)