அழகன் முருகன்

Su.tha Arivalagan
Apr 02, 2026,02:43 PM IST

- எம்.கே. திருப்பதி


முக்கண்கொண்ட

மூலத்தின் மூலம்

சரவணப் பொய்கையில் 

சனித்த கன்றவன்!


தண்தமிழ் தாயின்

தாய்மடி சிறக்க 

தரணியில் பிறந்த

தனித்த கன்றவன்!


அன்னை போல் அரவணைக்கும் 

ஆறு தலையும் -- அனைவருக்கும்

அள்ளித் தெளிக்கும்   ஆறுதலையும்!




ஆறுமுகம் -- நம்மின்

ஏறுமுகம்!

அருள் கூறுமுகம்!

குற்றம் கீறுமுகம்!

குணத்தில் நூறுமுகம்!


குன்றக் குமரன் 

குறத்தி மணாளன் 

நின்ற நெடியோன் 

நிறத்தில் பொன்னன்!


தெய்வானை வலதுகரன்

தெய்வத் திருமகன் 

ஆயிரம் கண்ணன் 

அன்பு மருமகன்!


தானவ மன்னன் 

ஆணவம் அழித்தவன் 

வானவ மன்னன்

வாழ்த்தில் களித்தவன்!


படைவீடு ஆறுக்கு

பக்தரை அழைப்பவன்

பக்தனுக்கு பாசமாய் 

பல்வரம் இழைப்பவன்!


முச்சங்கம் வளர்த்த

முத்தமிழ் கனியின்

முதுபெரும் கடவுள்

மூழ்கலாம் அதனுள்!


புலமைப் பாட்டி

புலனடக்கம் பேண  

பரீட்சித்தான் பழத்தில் 

பாடம் கற்றாள் கிழத்தி!


முன்னவன் கனியில்

முந்திக் கொண்டான்

அண்ணவன் செயலில் 

அநியாயம் கண்டான்!


பெற்றவர் தடுத்தும்

நற்றவன் விரைந்தான் 

திரு ஆவினன்குடி 

திருத்தலம் அடைந்தான்!


குன்றேறி நின்று 

குமரன் ஆனான் 

மலைக்கு மலை

அகரம் ஆனான்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)