மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

Manjula Devi
Apr 09, 2025,05:45 PM IST

மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 12ஆம் தேதி நடைபெறும் என்று அழகர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


மதுரையின் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. அதிலும் மீனாட்சி திருக்கல்யாணம், திரு தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபோகம் என ஒவ்வொரு விழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி வெளியூர் மக்கள் ஏராளமானோர் திரள்வது வழக்கம்.


அதாவது மதுரையை ஆட்சி புரியும் அம்பிகை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண அழகர் கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் வழி நெடுகிலும் பக்தர்களுக்கு எதிர் சேவை புரிந்து அருள் பாலிப்பார். தொடர்ந்து கல்யாணத்தை காண முடியாத விரக்தியினால் கோபத்தில் ஆற்றில் இறங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா மற்றும் அழகர் கோவில் திருவிழா இரண்டும் இணைத்து ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 




அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு கொண்டாடும் சித்திரைத் திருவிழாவை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிகழ்வில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், சந்தோஷம், ஒற்றுமை, உறவினர்கள் வருகை, என ஊரே களைகட்டும் சம்பவத்திற்காக மதுரை மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். அதே சமயத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் பந்தல் அமைத்தல், அலங்காரம் செய்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல், மோர் பந்தல் அமைத்தல், அவசரகால சேவைகள் என பல்வேறு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  


இதற்கிடையே சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு  வரும் ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மே பத்தாம் தேதி நிறைவடைகிறது என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது அழகர் கோவில் நிர்வாகம் சித்திரை திருவிழா குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அதில் அழகர் கோவில் சித்திரை திருவிழா மே 8-ம் தேதி தொடங்குகிறது. அதாவது அழகர் மலையில் இருந்து எட்டாம் தேதி கள்ளழகர் புறப்பட்டு வழி நெடுக உள்ள பக்தர்களுக்கு எதிர்சேவை புரிந்து அருள் பாலிப்பார். இதனைத் தொடர்ந்து மே 12ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.  இதனையடுத்து வண்டியூரில் மண்டூக  முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், தல்லாகுளத்தில் தசாவதாரத்தில் காட்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து மீண்டும் கள்ளர் வேடம் அணிந்து அழகர் மலையை நோக்கி புறப்படும் கள்ளழகர் 17-ம் தேதி அழகர் கோவிலை சென்று அடைகிறார் என அறிவித்துள்ளது.