சிவனே! போற்றி! போற்றி.. அழகிய சிங்கரின் என்பா

Su.tha Arivalagan
Aug 11, 2026,03:09 PM IST

- அழகிய சிங்கர்


(1)


பொன்னார் மேனியனை, மின்னார் செஞ்சடையானை,

மாதொரு பாகத்தானை,

மிளிர் கொன்றையானை,

பணிந்து பகர்வீர்;மனதில் இருத்தி!

சிவனே! போற்றி! போற்றி! 


(2)


அடைக்கலம் காத்தானை அடி பணிவீர்!

ஆடலரசன்  ஆட்டம்

காண்பீர்!  மதுரையம்பதியில்;

அடைவார்க்கமுதனை, அமுதீசனை,

ஆவுடையானைத் தொழுவீர்!

சிவனே! போற்றி! போற்றி!


(3)


சோம சுந்தரக் கடவுளை  நினையாமல்,

சோணாசலனை  நித்தமும் நீ நினையாமல்,

வீணான நாட்களென வருந்தியே,சரணடை.

சிவனே! போற்றி! போற்றி!




(4)


முன்னைப் பழமைக்கும் பழையதான அவனே; 

பின்னைப் புதுமைக்கும் புதிய வனும் அவனே! 

ஆதி அந்தமில்லா அகண்டனை ; போற்றுக! 

சிவனே! போற்றி! போற்றி! 


(5) 


சுந்தரனுக்கு நண்பனாய், 

அப்பருக்குத் தலைவனாய்

சம்பந்தனுக்கு தகப்பனாய்,

மாணிக்கவாசகனுக்கு  சற்குருவாய், 

அனைத்துயிரிலும் உறையொரு இறைவனைப்  போற்றுக!

சிவனே! போற்றி ! போற்றி!