வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

Su.tha Arivalagan
Aug 19, 2026,12:36 PM IST

அயர்வை அறுக்கும் அன்பு மொழியுடன்

தயக்கம் போக்கும் மா மருந்தாய்

வியக்கும் வண்ணம் இருக்கும் என்னவர்;

வேறென்ன வேண்டும் எனக்கு?


விரும்பும் வண்ணம் இரு; என்றே

கரும்பனைய சொல் சொல்லும் மகள்;

நிர்ப்பந்தம் இல்லா இனிய உறவு;

வேறென்ன வேண்டும் எனக்கு?




நா புரள்வது சற்றே ஏறக்குறைய

இருந்தாலும், கைவிடாது என்னை, தூக்கியே

நிறுத்தும்  கலைமகள் கருணையில் நானிருக்க;

வேறென்ன வேண்டும் எனக்கு


தளைகள் குறைந்த என் முதுமையில்

அலைபாயும் மனதை நிலை நிறுத்த 

சலியாது  நா சொல்லும் திருவாசகம்:

வேறென்ன வேண்டும் எனக்கு?


விரும்பிய பணியில் நீண்ட காலம்

இருந்தே நான் இயங்கி வந்தேன்.

குற்றமற்ற பணியில் அயர்வும் பெற்றபின்

வேறென்ன வேண்டும் எனக்கு?