அழகோவியம்!
- ந. தீபலட்சுமி
' சிலீங்.....சிலீங்.....'
'டப்....டப்....டப்.....'
"ஓ......முடியலையே..." என புலம்பிக்கொண்டே போர்வையை இழுத்து தலை வரை மூடிக்கொண்டாள் காவியா.
"இனிமேல் காதுகளில் பஞ்சு வைத்துக் கொண்டுதான் தூங்க வேண்டும் போல.... இந்த அம்மா தொல்லை தாங்க முடியலை..."
செல்போனை உயிர்ப்பித்து நேரத்தை பார்த்தாள்.
அதிகாலை நான்கு மணி எனக் காட்டியது டிஸ்ப்ளே.
உடனே அவள் உதடுகளில் புன்முறுவல்.
தினமும் இப்படித்தான். அதிகாலையில் அம்மா எழுவதும், பாத்திரங்களை உருட்டுவதும், சமையல் அனைத்தையும் முடித்துவிட்டு அழகாக டைனிங் டேபிள் மீது வைத்திருப்பதும், காவியாவிற்கு இது தினசரி பழகிய காட்சியாகிவிட்டது.
என்ன இருந்தாலும் ...நாள் பூராவும் ஆபீசில் உழைத்து விட்டு வரும் மகள் கொஞ்சம் அதிக நேரம் தூங்கினால் என்ன என்று இந்த அம்மா நினைக்கிறார்களா? என நொந்து கொள்வாள்.
கல்பனா....ஆம் , காவியாவின் அம்மா. அழகோவியம்!
சோம்பேறித்தனம் கிலோ என்ன விலை எனக் கேட்பாள்.
அவ்வளவு சுறுசுறுப்பு. பம்பரம் போல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு.
" காவியா...நல்லா சாப்பிடுடி..... எப்படி இளைச்சு போயிட்ட பாரு. வெறும் கண்ணு தான் முட்டை முட்டையா தெரியுது. கொஞ்சமாவது பூசின மாதிரி இருந்தா தானே பொண்ணு பார்க்க வர்றவங்களுக்கும் பிடிக்கும்?"
சொன்ன அம்மாவிற்கு மூக்கை சுழித்து அழகு காட்டினாள் காவியா.
"அம்மா... என்னை யாருக்கும் பிடிக்க வேண்டாம். உனக்கு பிடிச்சிருக்கா.... அதுவே போதும்.. உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்...." என கூறிய காவியாவின் தலையில் நங்கென விழுந்தது ஒரு குட்டு.
"இங்க பாரு... உங்க அப்பா என்னை பார்க்க வந்த பொழுது, நான் எலும்பும் தோலுமா இருந்தேன்னு உங்க பாட்டி என்ன வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். ஆனா இவரு தான் பிடிவாதமா எனக்கு கல்பனா மட்டும்தான் வேணும்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டார். எல்லாரும் உங்க அப்பா மாதிரி இருப்பாங்களா..?" சொல்லும் பொழுதே அவள் கன்னம் சிவந்து போனதை காவியா கவனிக்கத் தவறவில்லை.
உடனே காதுகளை தன் இரு கைகளாலும் மூடிக்கொண்டு,"அம்மா, ப்ளீஸ் போதும்.. உன்னோட கணவர் புராணம்.. இதைக் கேட்டு கேட்டு என் காது வலி அதிகமானதே தவிர குறையவில்லை" என அழகு காட்டிய காவியாவை கல்பனா அடிக்க துரத்திக் கொண்டு ஓட, வெளியில் சென்று இருந்த காவியாவின் அப்பா சிவன் உள்ளே வர இருவரும் முட்டிக்கொண்டு நின்றனர்.
'கொல்' லென சிரித்தாள் காவியா.
தன் மனைவியை அப்பொழுதுதான் புதிதாகப் பார்ப்பது போல் அவன் பார்க்க,தன் கணவனின் அப்பழுக்கற்ற முகத்தினை இவள் நோக்க......
"அய்யோ....போதும் பா உங்க ரொமான்ஸ்....
அண்ணலும் நோக்கினான்...அவளும் நோக்கினாள்...அப்படின்னு பேக்ரௌண்ட் டயலாக் போடனும் போலையே...." என விழுந்து விழுந்து சிரித்த காவியாவை இருவரும் வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டனர்.
எவ்வளவு அழகான தருணம் அது?
எத்தனை முறை கண்களை மூடினாலும் அன்றைய நிகழ்வு அவளின் கண்களில் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்ளும்.
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளை அலாரம் கூவி, கூவி எழுப்பியது.
மெல்ல போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தாள்.
இன்று என்ன சமையலாக இருக்கும்? ஓகே... எது இருந்தால் என்ன... அம்மா கையால் எதைச் சாப்பிட்டாலும் அது தனி ருசி தான்.
ஒரு ஆனந்த துள்ளலுடன் படுக்கையில் இருந்து எழுந்து பாத்ரூமை நோக்கி ஓடினாள் காவியா.
தூங்கி எழுந்தவுடன் நேராக கிச்சனிற்குள் வரக்கூடாது என்பதை ஒரு சட்டமாகவே போட்டிருந்தாள் கல்பனா.
அதனால் எப்பொழுதும் அப்பாவும் மகளும் எழுந்தவுடன் குளித்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
குளித்து உடைமாற்றி கண்ணாடியின் முன் தன்னை சீர் செய்து கொண்டு கிச்சனிற்குள் நுழைந்தாள் காவியா.
கம...கம...காபி வாசம் ஒருபுறம் இழுக்க....
வெஜிடபிள் குருமா - காவியாவின் ஃபேவரிட்.... வாசம் மற்றொருபுறம் இழுக்க....
டைனிங் டேபிளை பார்த்தவள் அசந்து போனாள்.
ஹோம் மேட் கேக்....
அவளுக்குப் பிடித்த ஒயிட் ஃபாரஸ்ட்...
மேலே..."ஹாப்பி பர்த்டே மை டியர் காவியா குட்டி" என எழுதப்பட்டிருந்தது.
' பொலக்' கென கண்களில் எட்டிப் பார்த்தது கண்ணீர்!
" என்னடி...மச..மசன்னு நின்னுக்கிட்டு..? போய் சாமி கும்பிட்டு வா. காமாட்சி அம்மன் விளக்கு பக்கத்துல ஒரு கிப்ட் வச்சிருக்கேன் திறந்து பாரு" என சொல்லிவிட்டு அழகாகச் சிரித்தாள் கல்பனா.
அந்தச் சிரிப்பில் மெய் மறந்த நேரம், அவள் தோளின் மீது ஒரு கை விழுந்தது.
அமைதியாக திரும்பிப் பார்த்தாள்.
சிவன்... காவியாவின் அப்பா, கண்களில் நீர் நிறைய நின்று கொண்டிருந்தார்.
" என்னம்மா.... உன்னோட பிறந்தநாளுக்கு அம்மா என்ன சமையல் செஞ்சு இருக்கா? "எனக் கேட்ட தந்தையின் தோள் மீது சாய்ந்து "ஓ"வென கதறி அழுதாள் காவியா.
அன்றைக்கு தான் அவர்கள் மூவரும் சேர்ந்து சிரித்த கடைசி நாள். சிறிது நேரத்தில் நெஞ்சை பிடித்து சரிந்த கல்பனாவை அவள் கணவன் தூக்கிக் கொண்டு ஓட, பின்னாலேயே இவள் ஓட.... மருத்துவமனை செல்வதற்குள் கல்பனாவின் உயிர் ஓடியிருந்தது.
எவ்வளவு அழகான தருணம் அது?
அழகோவியமாக அன்று சிரித்த கல்பனா அமைதியின் உருவாக அசைவில்லாமல் இன்று புகைப்படத்தில்.
பிரிவுத் துயரத்தை அனுபவிக்க தொடங்கியிருந்தனர் அப்பாவும் மகளும். அன்றிலிருந்து காவியாவின் ஹாலுசினேஷன்( Hallucination) அம்மாவாகிப் போயிருந்தாள் கல்பனா.
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியை - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)