"டேய் ரஞ்சித், இந்தப் பெயர்?".. அழாதே அனாமிகா (பயணம் 4)

Su.tha Arivalagan
Nov 24, 2026,06:20 PM IST
- ந. தீபலட்சுமி

வேக வேகமாக வந்த ரஞ்சித்தைப் பார்த்ததும் சடாரென எழுந்து விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்.

"ஹலோ சார்,ஐ ஆம் கிருஷ்ணன். உங்களை மீட் பண்ணதுல ரொம்ப சந்தோஷம்", என சொல்லிக்கொண்டே கைகளை நீட்டினார்.

"ஹாய் சார்,ஐ டூ கிளாட்  டு மீட் யூ சார்", என கூறிய ரஞ்சித் அவரின் கைகளைப் பிடித்து கைகுலுக்க அப்படியே அவனை தன் பக்கம் இழுத்து தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தார் கிருஷ்ணன். 

மீண்டும் குத்துவதற்காக கை ஓங்க, ரஞ்சித் அவரின் பிடியில் இருந்து சிரித்துக் கொண்டே தப்பி ஓட, இவர் துரத்த, இருவரும் சோபாவை திருவண்ணாமலை மலை சுற்றுவது போல் சுற்றிவர, கவின் தன் கண்களை அகல விரித்து பார்த்தபடி அப்படியே நின்றான். 

சில பல சுற்றுகளை முடித்தவுடன் இருவரும் சிரித்துக்கொண்டே ஒன்றாக அமர்ந்தனர். 

" கவின், மீட் மை ஃபிரண்ட் கிருஷ்ணன். இவர் என்னோட காலேஜ் மேட் .சீனியராக இருந்தாலும் இவர் எனக்கு எப்பவுமே ஒரு நல்ல ஃப்ரெண்ட்", என அறிமுகம் செய்தான் ரஞ்சித்.

" சார் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இன்ஸ்பெக்டர் சார் உங்களை என்கொயரி பண்ணனும் அப்படின்னு சொன்னவுடன் நான் பயந்து போனேன் சார்", என்றான் கவின்.



" ஓ , சாரி மிஸ்டர் கவின் அப்படி சொல்லிவிட்டு வந்தால் தான் ஒரு த்ரில் இருக்கும். அது மட்டுமல்ல . என்னோட பிரண்டுக்கு நான் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டாமா?", எனக் கேட்டு சிரித்தார் கிருஷ்ணன். 

" ஆஹா....என்ன மாதிரியான சர்ப்ரைஸ் கொடுத்தீங்க பார்த்தீர்களா" என ரஞ்சித் கிண்டலாக கேட்க, கிருஷ்ணன் அவன் மூக்கை பிடித்து குறும்பு செய்ய இதை பார்த்து கவின் மனம் விட்டு சிரித்தான். 

" என்னப்பா வீட்டுக்கு முதன் முதலாக வந்திருக்கேன். குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டியா? ஆமாம் உன்னுடைய ஒய்ஃப் எங்கே? உனக்கு எத்தனை குழந்தைகள்? எத்தனை வருடங்கள் ஆயிற்று உன்னை பார்த்து?", என்றவரை புன்னகையுடன் பார்த்தான் ரஞ்சித்.

"என்னோட ஒய்ஃப் நல்லா இருக்காங்க சார் .ஒரே ஒரு மகாலட்சுமி. பேரு அனாமிகா." அனு" அப்படின்னு கூப்பிடுவோம்".

அப் பெயரைக் கேட்டவுடன் கிருஷ்ணனின் முகம் மாறியது.

" டேய் ரஞ்சித், இந்தப் பெயர்.......?"

" ஆமாம் சார்,நீங்க நினைப்பது கரெக்ட்டுதான். அவளோட நினைவாகத்தான் 'அனாமிகா' ன்னு பெயர் வைத்தோம்."

" வைத்தோம் அப்படின்னு சொல்றியே... சோ.... உன்னோட மனைவிக்கு அந்த விஷயம்....?"

" அவளுக்கும் தெரியும் சார்"

" கிரேட், அதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை ரஞ்சித். எங்களுக்கு நல்லா தெரியும். அந்த பொண்ணு தான் தேவையில்லாமல் உயிரை விட்டு விட்டாள்".

இதைக் கேட்டதும் ரஞ்சித்தின் கண்கள் லேசாக கலங்கின. உடனே சுதாரித்து விட்டு, "கவின், சாருக்கு ஜூஸ் எடுத்துட்டு வாங்க. அப்படியே நைட் டின்னர் ரெடி பண்ண சொல்லுங்க".

" எஸ் சார்" என சொல்லிவிட்டு கவின் நகர அதுவரை சிரித்து பேசியபடி இருந்த கிருஷ்ணன் சீரியஸ் ஆனார். 

" ரஞ்சித் சார், நீங்க கொடுத்த இன்ஃபர்மேஷன் படி, அந்த கோடவுனை சுற்றி வளைத்து அங்கிருந்த ட்ரக்ஸ் அத்தனையும் சீஸ் பண்ணியாச்சு. அதேபோல அந்த சேல்ஸ்மேன் கண்ணியப் பனையும் அந்த ஜவுளிக்கடை ஓனர் மிஸ்டர் துரைசாமியையும் பிடித்து கஸ்டடியில் வைத்திருக்கிறோம். நீங்க எப்ப வரீங்க?", என ரகசியமாகக் கேட்டார் கிருஷ்ணன்.

" நாளை காலை 9 மணிக்கு நான் அங்க இருப்பேன் கிருஷ்ணன் சார்."

" ஓகே, நீங்க ஒரு கிரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர் என்பது....."

" நோ.... என்னோட  மனைவிக்கோ மற்றவர்களுக்கோ இதுவரை தெரியாது. அவர்களைப் பொறுத்தவரையில் நான் ஒரு தொழிலதிபர் அவ்வளவுதான்."

" எனக்கு புரியுது ரஞ்சித். நீங்க டிபார்ட்மெண்ட்ல சேரும்போதே இந்த ஒரு கோரிக்கையை வைத்து தான் சேர்ந்தீங்க. உங்களுடைய திறமையை பார்த்து டிபார்ட்மெண்டும் உங்களை விட்டு விட மனம் இல்லாமல் அண்டர் கவரேஜ்ஜில்  உங்களுடைய வேலையை தொடர சொல்லி இருக்காங்க,யு ஆர் எ ஸ்மார்ட் அண்ட் இன்டெலிஜென்ட் ரஞ்சித்".

" ஷ்...... சார் , இங்கே சுவருக்கும் காதுகள் இருக்கும். பேசும் பொழுது பார்த்து பேசுங்கள் கிருஷ்ணன் சார்".

" எஸ், ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். டிபார்ட்மெண்ட்ல எதற்கும் உங்களை கேர்ஃபுல்லா இருக்க சொல்லி இருக்காங்க ரஞ்சித் .ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு. அதற்காகத்தான் முக்கியமாக நான் இங்கு வந்ததே", என்றார் கிருஷ்ணன்.

" எனக்கும் இது போல் இரண்டு மூன்று கடிதங்கள் வந்தது சார். மொட்டை கடிதங்கள்."

" ரஞ்சித் ,நாம் இப்பொழுது எடுத்து இருக்கும் அண்டர் கவர் ஆபரேஷன் மிகவும் ஆபத்தானது. எனவே நீங்கள் ரொம்ப  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்".

" ஓகே சார் " 

இவர்கள் பேசிய அத்தனை விஷயங்களையும் ஏற்கனவே சுவரில் முளைத்திருந்த இரு காதுகள் கேட்டுக் கொண்டிருந்தன என்பதை அறியாமலேயே அவர்கள் அடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்து பேசத் தொடங்கினர்.

" அனுக்குட்டி...."

"ஆன்ட்டி ,அம்மாவும் அப்பாவும் இனிமேல் வரவே மாட்டாங்களா?"

"அனு டியர், அங்கிளும் நானும் இருக்கோம்டா. நீ எந்த கவலையும் படக்கூடாது  சொல்லும்போது கண் கலங்கினாள் ஜமுனா.

" பாப்பா.... இந்தாம்மா கொஞ்சமாவது சாப்பிடணும் அப்போ தான் உடம்பு சரியாகும்", என்றாள் ஜோதி.

" ஆமாம் செல்லம். கொஞ்சமாவது சாப்பிடும்மா. எனக்கும் மாலாவை நினைத்தால் மனமே ஆறவில்லை. ஆனால் கடவுள் உன்னை மட்டுமாவது விட்டு வைத்தாரே என நினைத்து ஆறுதல் பட்டுக்கொண்டேன்"அவளைக்  கட்டிக்கொண்டு கண் கலங்கினாள் ஜமுனா.

அனாமிகா கண்விழித்து ஒரு மாதம் ஓடி இருந்தது. ஆனாலும் அவளால் முன்பு போல் சாதாரணமாக இருக்க முடியவில்லை. சரியாக சாப்பிட முடியவில்லை. அதை விடக் கொடுமை.... இந்த கால்கள்..... பத்து வயது குழந்தை, பதினைந்து வயது குமரி ஆனது போல் அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக பக்குவம் அடையத் தொடங்கியது.

" ஆன்ட்டி அழாதீங்க இனிமேல் நான் நல்லா சாப்பிடுவேன் உங்களை கவலைப்பட விட மாட்டேன். நான் உங்களை ஒண்ணு கேட்கவா?" என இழுத்தாள் அனாமிகா.

" அடடே ,அனுக் குட்டி சாப்பிட போறாளா?" எனக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் அருண் ராஜ்.

" ஹாய் அங்கிள், குட்மார்னிங் "

அவளுடைய அழகான புன்முறுவல் பூத்த முகத்தை பார்த்தவுடன் அப்படியே நின்று விட்டான் அருண் ராஜ். அவன் முன்னால் ரஞ்சித்தும் மாலாவும் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு,

" வா...வா....அருண் ராஜ்.... உனக்காகத்தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்" என அழைப்பதை பார்த்து வெளிறிய முகத்துடன் நெற்றியில் முத்து முத்தாகப் பூத்த வியர்வையைக் கூட  துடைக்க முடியாமல் ஆணி அடித்தார் போன்று அப்படியே நின்று இருந்தான் அவன்.

(பயணம் தொடரும்)


முந்தைய அத்தியாயங்கள்


(ந. தீபலட்சுமி , B.T.ASST IN ENGLISH , GHSS - SATHUVACHARI , VELLORE)