Tamil Short Story: வாசலைக் கடந்த அன்பு
- எழுத்தாளர் கோ. பாமா
"சிவமயமாகத் தெரிகிறதே! சிந்தையில் சிவயோகம் வருகிறதே! புவனங்கள் ஆளும் அண்ணாமலையே! எனது விழிகளில் உனை காணும் பொழுதிலே!
மாறிடுதே
மனம் ஊறிடுதே! அண்ணாமலையானே! எங்கள் அன்பில் கலந்தோனே!"
என்று எஸ் பி பாலசுப்ரமணியத்தின் கணீர் என்ற குரலில் பாடல் மாசிலாமணீஸ்வரர் கோயிலில் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடலை முணுமுணுத்தவாறே மரகதம் கோயில் பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருந்தாள். மனதில் ஆயிரெத்தெட்டு சிந்தனைகள் வந்து ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்டே இருந்தன. நடையிலோ தளர்ச்சி,முகத்திலோ வாட்டத்துடன் காணப்பட்டாள் மரகதம்.
தளர்ந்த நடையுடன் பிரகாரத்தை வலம் வந்து கொடி மரத்தின் அருகில் வணங்கி விட்டு,கோயிலுக்குள் இருந்த மண்டபத்தூணில் கவலையுடன் சாய்ந்து அமர்ந்தாள். மரகதத்தின் கணவர் சுப்பையா. இரு ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறைவனடி சேர்ந்தார். சுப்பையா மரகதம் தம்பதியினரின் ஒரே மகன் மணிமாறன். மணிமாறனுக்கும் திருமணம் ஆகி ஆறு வயதில் ஒரு மகளும்,மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். மருமகள் வசந்தி தனியார் கம்பெனியில் வேலைக்குச் செல்கிறாள்.
சுப்பையா இறப்பதற்கு முன் வரை மரகதம் கிராமத்தில் தான் இருந்தாள். ஊரிலிருந்து வயல்களை கவனித்துக் கொண்டு இருவரும் நாட்களை கழித்துக் கொண்டிருந்தனர். சுப்பையாவின் மறைவிற்குப் பின்னர் அம்மாவைத் தனியாக விட வேண்டாம் என்று மணிமாறன் தான் சென்னைக்கு அழைத்து வந்து விட்டான். அங்குதான் ஆரம்பித்தது பிரச்சனை.
மருமகள் வசந்திக்கு மரகதத்தின் வரவு பிடிக்காமல் போனது. மரகதம் எவ்வளவுதான் வசந்திக்கு ஒத்தாசையாக இருந்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருந்தாள். ஒவ்வொரு நாள் விடியும் பொழுதும் மரகதம் "ஈஸ்வரா! என்னை எப்பொழுது உன் திருவடியில் அழைத்துக் கொள்ளப் போகிறாய்?" என்று வேண்ட ஆரம்பித்து இருந்தாள். அந்த அளவிற்கு மனம் ரணமாய் இருந்தது.
இன்றும் அதே கவலையுடன் கோயில் மண்டபத்தின் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். மகன் மணிமாறன் நல்ல பிள்ளை தான் என்றாலும் வசந்தியை அதட்டுவதற்கு அவனால் இயலவில்லை. கோயிலில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த அவளின் பார்வை கோபுரத்தை நோக்கி இருந்தது. அப்போது மரகதத்தின் வயதை விட ஐந்து வயது சிறியவர் போன்று தோற்றம் கொண்ட மற்றொரு பெண்மணி மரகதத்தின் அருகில் வந்து அமர்ந்தார். அவர் மெதுவாக மரகதத்தின் தோளைத்தொட்டு "அம்மா! தினமும் நான் உங்களை இங்கே பார்க்கிறேன். உங்கள் முகத்தில் ஏதோ ஒரு கவலை தென்படுகிறது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னிடம் கூற இயலுமா ? " என்றார்.
முகம் தெரியாத நபரிடம் தன்னுடைய கவலையைக் கூறுவதா என்று யோசித்தவரே தயங்கினாள் மரகதம். இருப்பினும் மனதில் உள்ளதை யாரிடமாவது கூறினால் சற்று பாரம் குறையுமே என்று மருமகள் தன்னை அன்பாக நடத்தாததைக் கூறினாள். அப்போது அருகில் அமர்ந்திருந்த பெண்மணி "அம்மா! கவலைப்படாதீர்கள். நான் ஒரு யோசனை உங்களுக்குச் சொல்கிறேன். நான் அருகில் இருக்கும் பிரபா முதியோர் இல்லத்தை நடத்துகிறேன். அங்கு சமையலுக்கு ஆள் தேவைப்படுகிறது. நீங்கள் வந்து விடுகிறீர்களா? எங்களுடனேயே தங்கி விடலாம். நாங்கள் நன்றாக உங்களைப் பார்த்துக் கொள்கிறோம். யோசித்துச் சொல்லுங்கள்" என்று கேட்டார்.
மரகதம் யோசித்துக் கொண்டே "சரி, அம்மா நான் யோசித்து நாளை பதில் சொல்கிறேன்" என்றவாறு கோபுரத்தை நோக்கி வணங்கி விட்டு வீட்டிற்குச் சென்றாள். இரவு முழுதும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவளாய் காலையில் எழுந்ததும் தன் மகனிடம் தான் முதியோர் இல்லத்தில் சமையல் வேலைக்கு சேர்ந்து கொள்ள இருப்பதையும் , இனி தான் அங்கே தான் இருக்கப் போவதாகவும் தனது முடிவைக் கூறுகிறாள் மரகதம்.
அம்மாவின் முடிவைக் கேட்ட மகன் திகைத்து நின்றான். தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்று அவன் கண்களில் கண்ணீர் துளித்தது. மரகதமோ மகனருகில் வந்து ஆறுதலாக தலையை தடவிக் கொடுத்து," கவலை படாதே தம்பி! இங்கு தான் முதியோர் இல்லம் இருக்கிறது. என்னைப் பார்க்க வேண்டும் என்றால் பேரக் குழந்தைகளுடன் நீயும் வந்து பார்த்து விட்டுச் செல். என்றைக்காது ஒரு நாள் வசந்தி என்னைப் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் நான் காத்திருக்கிறேன்" என்று கூறியபடி மரகதம் புதிய நம்பிக்கையுடன் பிரபா முதியோர் இல்லத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சேர்ந்த சில நாட்களிலேயே மரகதத்தின் சமையல் அனைவருக்கும் பிடித்து போனது. அது மட்டுமல்லாமல் மரகதத்தின் இயல்பான குணமும், அனைவரிடமும் அன்பாகப் பழகும் தன்மையும் மிகவும் அனைவருக்கும் பிடித்துப் போனது.
இது நாள் வரை காலையில் எழும்போது ஈஸ்வரா என்னை எப்பொழுது அழைத்துக் கொள்ளப் போகிறாய் என்ற வேண்டுதல் மாறி, இந்த முதியோர் இல்ல மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். இவர்களுக்காக நான் நல்ல உடல் நிலையுடன் இருக்க வேண்டும் என்று வேண்ட ஆரம்பித்திருந்தாள் மரகதம். இந்த உலகம் தான் எவ்வளவு விசித்திரமானது.
அன்பிற்காக ஏங்கியவள் இப்போது மற்றவர்கள் அன்பிலே திளைக்கிறாள். நிச்சயமாக வசந்தியும் ஒரு நாள் புரிந்து கொள்வாள்.. நம்பிக்கையுடன் காத்திருந்தாள் மரகதம்.
(எழுத்தாளர் கோ பாமா, கணித பட்டதாரி ஆசிரியர், சென்னை நடுநிலைப்பள்ளி, செட்டியார் அகரம்)