Bangladesh in Tears: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஜியா காலமானார்

Su.tha Arivalagan
Dec 30, 2025,08:38 AM IST

டாக்கா : வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் முதல் பெண் பிரதமருமான பேகம் காலிதா ஜியா (80), உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30, 2025) காலமானார். இச்செய்தியை அவரது கட்சியான வங்கதேச தேசிய கட்சி (BNP) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காலை 6 மணியளவில், ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அவர் காலமானார்.


காலிதா ஜியா, தனது கணவரும் முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் 1981-ல் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தார். நாட்டில் ராணுவ ஆட்சியை அகற்றி ஜனநாயகத்தை மீட்டெடுக்க முக்கியப் பங்காற்றினார்.1991-ல் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு 2001 முதல் 2006 வரை மீண்டும் பிரதமராகப் பணியாற்றினார். 




இவர் கல்லீரல் பாதிப்பு (Advanced Cirrhosis), மூட்டுவலி, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த நவம்பர் மாதம் முதல் அவர் டாக்காவிலுள்ள எவர்கேர் (Evercare) மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காலிதா ஜியாவின் மறைவு வங்கதேச அரசியலில் ஒரு பெரும் சகாப்தத்தின் முடிவாகக் கருதப்படுகிறது. அவரது அரசியல் வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. ஷேக் ஹசீனாவுடனான அவரது பல தசாப்த கால அரசியல் போட்டி அந்நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்தது.


சமீபகாலமாக ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை மற்றும் வீட்டுக்காவலில் இருந்த அவர், கடந்த 2024-ல் உச்ச நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரது மகன் தாரிக் ரஹ்மான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லண்டனிலிருந்து வங்கதேசம் திரும்பிய சில நாட்களிலேயே காலிதா ஜியா உயிரிழந்துள்ளார்.


வங்கதேசத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரது மறைவு அந்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக அரசின் தலைவர் முகமது யூனுஸ் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்கள் அவரது மறைவுக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.