வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

Su.tha Arivalagan
Dec 19, 2025,01:20 PM IST

தாக்கா : வங்கதேசத்தில் ஜூலை மாத எழுச்சியின் முக்கிய தலைவர் ஷெரிஃப் உஸ்மான் ஹடி கொல்லப்பட்டதால், நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது. நேற்று இரவு, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், ஹடியின் மரணத்தை தொலைக்காட்சியில் அறிவித்தார். "இன்று, மிகவும் வருத்தமான செய்தியுடன் உங்கள் முன் வந்துள்ளேன். ஜூலை எழுச்சியின் அஞ்சா நெஞ்சன், இன்கிலாப் மஞ்சின் செய்தித் தொடர்பாளர் ஷெரிஃப் உஸ்மான் ஹடி, நம்மிடையே இல்லை" என்று அவர் கூறினார். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


தலைமை ஆலோசகர் சனிக்கிழமையை ஒரு நாள் துக்க நாளாக அறிவித்தார். அன்றைய தினம், அனைத்து அரசு, தன்னாட்சி அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கதேச தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஹடியின் ஆன்மா சாந்தியடைய சிறப்புப் பிரார்த்தனைகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளிலும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இன்கிலாப் மஞ்சின் தலைவர் முகமது அப்துல் அஹத், ஹடியின் உடல் வெள்ளிக்கிழமை தாயகம் கொண்டு வரப்படும் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாகத் தகவல் வெளியானது.


உஸ்மான் ஹடி யார்? 




ஹடி, 'ஆன்டி-ஹசீனா' தளமான இன்கிலாப் மஞ்சின் உறுப்பினராக இருந்தார். வரவிருக்கும் பிப்ரவரி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகவும் அவர் இருந்தார். தாக்குதல் நடந்த நேரத்தில், அவர் சுயேச்சையாக தாக்கா-8 தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஜூலை எழுச்சியின் போது இன்கிலாப் மஞ்ச் அமைப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்த எழுச்சி இறுதியில் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலுக்கு வழிவகுத்தது. இந்த அமைப்பு ஒரு தீவிரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது. இது அவாமி லீக் கட்சியை தீவிரமாக எதிர்த்து வந்தது. மாணவர் எழுச்சியில் முக்கியப் பங்கு வகித்த போதிலும், யூனுஸ் அரசாங்கம் இந்த அமைப்பை கலைத்து, தேசியத் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது.


இந்நிலையில் உஸ்மான் ஹடி படுகொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பல இடங்களில் கலவரம், தீவைப்பு சம்பவங்கள் ஆகியன நடைபெற்று வருவதால் அங்கு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.