பேங்க் போக வேண்டிய வேலை இருக்கா.. தயவு செய்து 5ம் தேதி போகாதீங்க... இந்த மாநிலங்களில் லீவு!

Su.tha Arivalagan
Nov 04, 2025,11:17 AM IST

சென்னை: வங்கிகளுக்குப் போக வேண்டிய வேலை இருந்தா இன்னிக்கே பண்ணிடுங்க. இல்லாட்டி நாளை மறு நாள் 6ம் தேதி போங்க. காரணம், நாளை வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். ஆனால் இது தமிழ்நாட்டைச் சேராத வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.


குரு நானக் ஜெயந்தி மற்றும் கார்த்திக் பௌர்ணமி பண்டிகைகள் வருவதால், பல மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். ஆன்லைன் வங்கிச் சேவைகள், மொபைல் பேங்கிங், UPI மற்றும் ATM சேவைகள் வழக்கம் போல் செயல்படும். ஆனால், கிளைகளில் மட்டுமே செய்யக்கூடிய பெரிய ரொக்கப் பரிவர்த்தனைகள், காசோலைகள் கிளியரிங், டிமாண்ட் டிராஃப்ட் பெறுதல் போன்ற சேவைகள் கிடைக்காது.


ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியாவின் (RBI) தகவலின்படி, நவம்பர் 5 அன்று பின்வரும் மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்: மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சண்டிகர், உத்தரகாண்ட், தெலுங்கானா, அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், நாகாலாந்து, மேற்கு வங்கம், புது டெல்லி, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம்.


இந்த மாதத்தில் வரவிருக்கும் மற்ற வங்கி விடுமுறைகள்:




- நவம்பர் 6: பீகார் மற்றும் மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும். இது நோங்க்கிரேம் நடன விழா மற்றும் பீகார் சட்டமன்றத் தேர்தல் காரணமாக லீவு விடப்படுகிறது.

- நவம்பர் 7: மேகாலயாவில் வாங்லா திருவிழா கொண்டாடப்படுவதால் வங்கிகளுக்கு விடுமுறை.

- நவம்பர் 8: கர்நாடகாவில் கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும்.


வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாட வங்கிப் பரிவர்த்தனைகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம். ஆன்லைன் வங்கிச் சேவைகள், மொபைல் பேங்கிங், UPI மற்றும் ATM போன்ற டிஜிட்டல் சேவைகள் எப்போதும் போலச் செயல்படும். இதன் மூலம், பணம் அனுப்புதல், பில்களைச் செலுத்துதல் மற்றும் கணக்கு இருப்பைச் சரிபார்த்தல் போன்றவற்றைச் செய்யலாம்.