"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
திரைப்பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட முன்னணி இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரின் பேச்சுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அட்லீயின் 'குட்டி ஸ்டோரி' :
நிகழ்ச்சியில் மேடையேறிப் பேசிய இயக்குநர் அட்லீ, ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான குட்டி ஸ்டோரியைப் பகிர்ந்து கொண்டார். "துணி துவைக்கும் நபர் ஒருவர், தனது கழுதை மீது அழுக்கு துணி மூட்டையை வைத்துச் சென்றார். அதைப் பார்த்த அந்த ஊர்க்காரர் ஒருவர், 'ஐந்தறிவு ஜீவன் மீது இவ்வளவு மூட்டையை வைத்து துன்புறுத்துகிறாயே' என்று கூறினார். இதனால் அந்த நபர் மனமிரங்கி, கழுதையை விட்டுவிட்டு தன் தலையிலேயே துணி மூட்டையை சுமந்துகொண்டு சென்றார். அடுத்த ஊருக்குச் சென்ற போது அங்கிருந்தவர்கள், 'கழுதை சும்மா இருக்கும் போது தலையில் மூட்டையை வைத்துச் செல்கிறாயே, உனக்கு அறிவிருக்கிறதா?' என கேள்வி எழுப்பினர்."
இந்தக் கதையைக் கூறிவிட்டு அட்லீ தொடர்ந்து பேசுகையில், "எவன் என்ன சொல்கிறான் என்பதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்... சின்னச் சின்ன பொறிகளில் சிக்கிவிடாதீர்கள். சோஷியல் மீடியாக்களில் இவர் அவரைச் சொல்கிறார், அவர் இவரைச் சொல்கிறார் என்பதெல்லாம் உண்மையல்ல; எதைச் சொல்ல வேண்டும் என்றாலும் நேரடியாகவே சொல்லலாம்" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!
இவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, தளபதி விஜய் மற்றும் அவரது மகன் சஞ்சய் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். "'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய்யின் மகன் சஞ்சய்க்கு நான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தேன். அதன்பின் நடிகர் விஜய் சார் எனக்கு போன் செய்து, 'தேங்க்ஸ் நண்பா...சஞ்சய் உங்களது வாழ்த்தால் ரொம்ப சந்தோஷப்பட்டான்' என்று கூறினார். சஞ்சய்க்கு என்னை ஏன் பிடித்திருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் சஞ்சயிடம், 'உங்கள் வீட்டிலேயே அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் இருக்கும் போது என்னை பிடிக்குமா?' என்று ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறேன். சஞ்சய் மிகவும் தங்கமான பையன், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று விஜய் சேதுபதி மனம் திறந்து பேசினார்.
சமீபத்தில் விஜய் டிவி.,யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் குறித்து மறைமுகமாக விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதற்காக விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெக தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லி, விஜய் டிவி சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.இந்நிலையில் விஜய் சேதுபதி நிகழ்ச்சி மேடையில் முதல்வர் விஜய் மற்றும் அவரது மகனை பாராட்டி பேசி உள்ளார்.