வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!

Su.tha Arivalagan
Oct 22, 2026,10:57 AM IST

சென்னை : தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்றும் கணித்துள்ளது. 


புயலுக்கு 'முரசு' எனப் பெயர்:


வங்கக்கடலில் உருவாகும் இந்த புதிய புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்படும். இந்தப் பெயர் இந்தியா பரிந்துரைத்த பெயராகும். 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ (Orange Alert) விடுக்கப்பட்டு உள்ளது.




மேலும், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்:


கனமழை மற்றும் தீவிர புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது. 


பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.