ஷ்ரேயாஸ் ஐயரை ஒரு நாள் டீமுக்கான கேப்டனாக்கப் போறோமா.. மறுக்கும் பிசிசிஐ

Su.tha Arivalagan
Aug 22, 2025,05:01 PM IST

மும்பை: ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாத நிலையில் அவரை ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டனாக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பிசிசிஐ அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


ஷ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை 2025 அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது பல விமர்சனங்களைத் தூண்டியது. இந்த நிலையில்தான், ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கு முன்பே, ஐயர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்தன. 


அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படவுள்ளதாகவும், 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து, இந்த திட்டத்தை பிசிசிஐ கையில் எடுத்திருப்பதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா மறுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இது புதிய செய்தி. இது குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை என்றார்.




ஷ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை 2025 அணியில் இடம் பெறாதது பலருக்கும் ஏமாற்றம் அளித்தது. அவருக்கு பதிலாக வேறு சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது பல விவாதங்களுக்கு வழி வகுத்தது. முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், முன்னாள் டெஸ்ட் ஆல்ரவுண்டர் ஆர். அஸ்வின் உள்ளிட்ட பலரும் ஐயர் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.