ஆரோக்கியத்தின் சுரங்கம் வெந்தயக் கீரை: சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை தீர்வு தரும் அற்புத மூலிகை!

Meenakshi
Dec 29, 2025,03:06 PM IST

ச.சித்ராதேவி


நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் கீரை வகைகளில் வெந்தயக் கீரை தனிச்சிறப்பு வாய்ந்தது. கசப்புத் தன்மை கொண்டதாக இருந்தாலும், இதில் பொதிந்துள்ள மருத்துவப் பலன்கள் ஏராளம். இக்கீரை தரும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.


சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்


வெந்தயக் கீரையில் உள்ள நார்சத்து மற்றும் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கின்றன. இன்சுலின் சுரப்பைச் சீராக்குவதில் இது முக்கியப் பங்கு வகிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.


செரிமான மண்டலம் சீராகும்




வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகளைத் தீர்க்க வெந்தயக் கீரை உதவுகிறது. இது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஜீரண சக்தியைத் தூண்டுகிறது. வயிற்றுப்புண் (Ulcer) உள்ளவர்கள் இக்கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. வெண்ணெயில் போட்டு வதக்கி சாப்பிட்டால் வயிறு உப்புசம் தலைசுற்றல் உடல் சூடு வறட்டு இருமல் குணமாகிவிடும் 


இதய ஆரோக்கியம்


உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனால், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் (Cholesterol) அளவைக் குறைப்பதில் வெந்தயக் கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.


எலும்பு மற்றும் பற்கள் வலிமை பெறும்


இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் K அதிகளவில் இருப்பதால், எலும்புத் தேய்மானத்தைத் தடுத்து எலும்புகளை வலிமையாக்குகிறது. வளரும் குழந்தைகளுக்கு இக்கீரையைக் கொடுப்பது அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.


பெண்களுக்கான நன்மைகள்


பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால வலி மற்றும் ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்ய வெந்தயக் கீரை உதவுகிறது. மேலும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்க இது சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை நரம்புகளை பலப்படுத்தும். வெந்தயத்தில் இரும்பு சத்து இருப்பதால் முடி கொட்டுவது நிற்கும். ரத்த அழுத்தம் சீராகும் ரத்தம் சுத்தமாகும் ரத்ததத்தித் உள்ள கொழுப்பு குறையும் வாயுத்தொல்லை உள்ளவர்கள் தினமும் காலையில் பொடித்த வெந்தயம் சாப்பிடலாம்


அழகுக் குறிப்பு


உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது, கூந்தல் மற்றும் சருமப் பராமரிப்பிற்கும் வெந்தயக் கீரை பயன்படுகிறது. பொடுகுத் தொல்லை நீங்கவும், கூந்தல் பளபளப்பாகவும் இக்கீரை விழுதை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.


(ச.சித்ராதேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)