பெங்களூருவில் தமிழ் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?.. சூப்பர் சான்ஸ் வந்திருக்கு பாஸ்!

Su.tha Arivalagan
Dec 02, 2025,01:32 PM IST

- க.சுமதி


பெங்களூரு: நீங்க பெங்களூரில் வசிக்கிறீர்களா.. நல்ல தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறீர்களா.. எங்கு போய் வாங்குவது என்று தெரியவில்லையா.. கவலையே படாதீங்க ,  உங்களுக்காகவே வருகிறது புத்தகத் திருவிழா.


பெங்களூருவில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்களுக்காகவே புத்தகத்திரு விழாவை கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூர் தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்திவருகிறது. மிகப் பெரிய அளவில் இது இப்போது அங்கு பிரபலமடைந்துள்ளது. காரணம், ஒரே இடத்தில் புத்தகங்கள் கொட்டிக் கிடப்பதுதான்.


இந்த வருடமும் வரும் 5.12.25 முதல் 14.12.25 வரை பெங்களூருவில் புத்தகத் திருவிழாவானது டாக்டர் பி ஆர் அம்பேத்கர் வீதியில் உள்ள தி இன்ஸ்டடியூஷன்ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவானது  புத்தக ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.




பெங்களூரு பலதரப்பட்ட மொழி பேசும் மாநகரமாக விளங்குவதால் இங்கு தமிழ் புத்தகங்கள் மட்டுமன்றி ஆங்கிலம், இந்தி கன்னடம், தெலுங்கு முதலான அனைத்து மொழிப் புத்தகங்களும் கிடைக்கும்.என்று விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.


இங்கு இளைஞர்கள் படிக்க விரும்பும் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் வரலாற்று மரபுகளை எடுத்தியம்பும் நூல்களும்,பெண்களை கவர்ந்திருக்கும் கந்தபுராணம், குற்றாலக் குறவஞ்சி போன்ற சங்க நூல்களும், ஆன்மீகவாதிகளுக்காக பக்தி நூல்களும்,  சிறார் விரும்பி படிக்கும் நீதிக்கதை நூல்களும் விற்பனைக்கு வர உள்ளதாக விழா குழுமம் தெரிவித்துள்ளது.


இங்கு புத்தகங்கள் மட்டுமல்ல நமது தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழ் குழந்தைகளுக்கான தமிழ் மரபு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தமிழ் மரபு தின்பண்ட விற்பனைக்கண்காட்ச்சியும்  நடைபெற உள்ளன.


அது மட்டுமன்றி குழந்தைகள் முதல் பெரியவர் வரை வியப்புடன் பார்த்து மகிழும் மாயவித்தை  காட்சிகளும் நடைபெற உள்ளன.  இதனைத் தொடர்ந்து பெண்களை கவர்ந்திருக்கும் வள்ளி திருமணம் தெருக்கூத்து, சிந்தையை ஈர்க்கும் வள்ளலார் பற்றிய வில்லுப்பாட்டு கச்சேரியும் நடைபெற உள்ளன.


மாணவர்கள், ஆசிரியர், பொதுமக்களுக்கான தமிழோடு விளையாடு, தமிழ் மொழித் திறன்  போட்டி, கவிதைப்போட்டி, கதை சொல்லுதல் போன்ற  பல வகையான போட்டிகள் நடைபெற உள்ளன. பேச்சாளர்களை ஈர்க்கும் பட்டிமன்றம், சொற்பொழிவுகள், 

மற்றும் கருத்தரங்கும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நாள்தோறும் ஒரு நிகழ்ச்சியாக பட்டியல் இடப்பட்டு நடைபெறும் என விழாக் குழுவினர்  தெரிவித்தனர். 


இந்தப் போட்டிகள் தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி கல்லூரி பல்கலைக்கழகம் என்று வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடைபெறும் மற்றும் பரிசுகளும் அறிவிக்கப்படும் என்று விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். 


இது மட்டுமின்றி அனைவரும் விரும்பும் இலவச சித்த மருத்துவர் சந்திப்பு, இலவச கண் பரிசோதனை முகாம்  போன்ற மருத்துவ சேவைகளையும் வழங்க உள்ளனர். பிறகென்ன பெங்களூர் தமிழ் மக்களே.. மிஸ் பண்ணிடாம இதுக்குப் போய்ட்டு வாங்க.. இஷ்டப்பட்ட புத்தகங்களை கஷ்டப்படாமல் ஒரே இடத்தில் வாங்கிச் செல்லுங்க.


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)