யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
- பா. பானுமதி
ஆணவம்
அமைதி தருமா....?
கர்வம்
பணிவு தருமா...?
ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் எல்லாம்
அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள்
கொண்டாடி மகிழ்ந்தவர்கள் எல்லாம்
திண்டாட்டம் கண்டுவிட்டார்கள்
செண்டாட்டம் இருந்தவர்கள் எல்லாம்
மண்டாட்டம் ஆகிவிட்டார்கள்
பன்னீரில் குளித்தவர்கள்
பசிக்கு பச்சை தண்ணீர் குடித்தார்கள்
மாளிகையில் வாழ்ந்தவர்கள் எல்லாம்
மண்ணோடு போனார்கள்
அறுசுவை உண்டவர்கள் எல்லாம்
அளவிற்கு உணவின்றி தவித்தார்கள்
தங்கத்தில் ஜொலித்தவர்கள் எல்லாம்
தகரமாகிப் போனார்கள்
வானம் ஏறி பறந்தாலும்
மண்ணுக்கு வந்தாலே மகிழ்ச்சி
அலை கடலில் ஆடினாலும்
கரைக்கு வந்தாலே நெகிழ்ச்சி
செல்வம் கோடி சேர்ந்து இருந்தாலும்
உறவு இருந்தாலே மலர்ச்சி
பணம் மலையாய் குவிந்து இருந்தாலும்
மக்கள் இல்லாவிட்டால் ஏது புகழ்ச்சி
பணம் புகழ் பதவி அதிகாரம் என எது இருந்தாலும்
அதிகமாய் ஆடாமல் அமைதி கொள்
அமைதியில்தான் ஆனந்தம் பிறக்கும்
அதன் பிறகு நிம்மதி சிறக்கும்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், மதுரையைச் சேர்ந்தவர்)